10 பகுதி-10: நைனிதால் – ஒன்பது முனை ஏரி

ரம்மியமான சூழல் பார்க்கும்போதே
இங்கே செல்ல ஆசை வருகிறது அல்லவா…..

நோக்குச்சியா தால் – ஹிந்தியில் நோ [ஆங்கில No அல்ல! :)] என்றால் ஒன்பது எனும் எண் – ஏக், தோ, தீன், சார், பாஞ்ச், சே, சாத், ஆட், நோ…. வரிசையில் வரும் நோ! இந்த பெயரில் நோ என்பது இருப்பதால் இது எதோ ஒன்பதாம் எண்ணைக் குறிப்பதாக நினைத்தால் அது தான் சரியான எண்ணம். குச்சியா… என்பது முனைகளைக் குறிக்கும் ஒரு சொல். அதாவது இந்த ஏரிக்கு ஒன்பது முனைகள் – அதனால் நோகுச்சியா தால்!

படகுப் பயணம் செல்ல நீங்கள் தயாரா? கேட்காமல் கேட்கிறதோ இப்படகு?

நைனிதால் நகரிலும், அருகிலுள்ள இடங்களிலும் இருப்பதிலேயே ஆழமான ஏரி இந்த ஒன்பது முனை ஏரி. சுமார் ஒரு மீட்டர் நீளமும் நாற்பது அடி ஆழமும் உள்ள ஏரியாக இதைச் சொல்கிறார்கள். ரொம்பவும் பழமையான ஏரிகளில் இந்த ஏரியும் ஒன்று. பழமையான இடம் என்றாலே அதைச் சுற்றி நிறைய கதைகளும் இருக்கும் அல்லவா – இந்த ஒன்பது முனை ஏரி பற்றியும் நிறைய கதைகள் உண்டு – அவை கட்டுக்கதைகளோ உண்மையோ என்பதை இங்கே ஆராயப் போவதில்லை!

 

இந்த ஏரியின் அருகே தரையில் நின்றபடியே ஒருவரால் ஏரியின் ஒன்பது முனைகளையும் பார்க்க முடிந்தால் அப்படியே காற்றில் கரைந்து பரமனின் பாதங்களை அடையலாம் என்று சொல்கிறார்கள். இத்தனை பெரிய ஏரியின் ஒன்பது முனைகளையும் நின்ற இடத்தில் இருந்தே பார்ப்பது கடினம் என்பதை இப்படி முடியாத ஒன்றை சமன்படுத்திச் சொல்லி இருக்கிறார்கள் போல!

மலையோரம் வீசும் காற்று…..
படகிலிருந்து எடுத்த படம்….

மிக அழகான ஏரி. சென்ற பகுதியில் பார்த்த பீம்தால் போலவே, இங்கேயும் நிறைய வாத்துகள் சுற்றிக் கொண்டிருந்தன. மாலை நேரம் என்பதால் எங்கெங்கும் ஒரு வித அமைதி – மனதைக் கொள்ளைக் கொண்டது. படகுகள் காத்திருக்க, ஒரு பயணம் செய்ய நினைத்தோம். மாலையும் இரவும் சந்திக்கும் நேரம் என்பதால் சூரியன் மறைய மறைய குளிர் தனது விகார முகத்தினைக் காட்டத் துவங்கி இருந்தது.

 

கைகளுக்கு கை உறைகள், தலையும் காதும் மூடுவது போன்ற குல்லாய்கள், காலிற்கு காலுறைகள், காலணிகள், குளிருக்கான உடை என்று தயாராக இருந்தாலும் அத்தனையையும் தாண்டி நரம்புகளையும் எலும்புகளையும் தனது வலிமையைக் காட்டித் தாக்கத் துவங்கியது குளிர். ஆனாலும் அது ஒரு அற்புத அனுபவமாகத்தான் இருந்தது. அரை மணி நேரம் அந்த சூழலில் ஏரியில் ஒரு இனிமையான படகுப் பயணம் செய்து வந்தோம்.

நான் தான் பஹாடி நிம்பு….. 

ஏரியில் பயணிக்கும் போது சுற்றிச் சுற்றி அடிக்கும் குளிர் காற்றில் காமிராவில் கிளிக் செய்வதே – அதுவும் கையுறைகள் அணிந்து புகைப்படங்கள் க்ளிக் செய்வது கடினமாக இருந்தது! பயணம் முடித்து கரைக்கு வந்தால் சுடச்சுட தேநீர் குடித்தே ஆகவேண்டிய நிலை! ஏரியோரம் அமைந்திருந்த ஒரு சிறிய கடையில் தேநீர் தயாரிக்கும்படிச் சொல்லி சுற்று வட்டாரத்தினை நோக்கினோம்!

 

ஒரு குழந்தையும் அவரது தந்தையும் அங்கே இருந்த பூனையுடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள் – அவர்களும் சுற்றுலாப் பயணிகள் தான். ஹரியானா மாநிலத்தினைச் சேர்ந்தவர்கள் – அவரையும், அவரது குழந்தையையும் தனது ”சக்ரீன் டச்” அலைபேசியில் படம் எடுத்துத் தரச் சொன்னார் – கையுறைகள் அணிந்த கைகளுடன் படம் பிடிக்க ரொம்பவே கஷ்டமாக இருக்க, ஆனது ஆகட்டும் என ஒரு கையில் மட்டும் கையுறைகளை கழற்றி அவர்களைப் படமெடுத்தேன்!

ஓடம் நதியினிலே…….

தேநீர் கடையில் சில பழங்களும் அடுக்கி வைத்திருந்தது – என்ன பழம் என்று கேட்டால் “பஹாடி நிம்பு” என்றார் கடைக்காரர். அதாவது மலை எலுமிச்சை…. பார்க்க நமது கிடாரங்காய்/நார்த்தங்காய் மாதிரியே இருக்கிறது. நம் வீட்டில் உள்ள பெண்மணிகளை அழைத்துச் சென்றிருந்தால் வாங்கி ஊறுகாய் போட்டிருப்பார்கள்! நாமும் ருசித்து சாப்பிட்டு இருக்கலாம்! 🙂 நானே வாங்கி வந்து ஊறுகாய் போட நினைத்தேன் – பார்க்கும்போதே நன்றாகவும் அழகாகவும் இருந்ததால்!

”எலே….. கூட்டமா நின்னு என்னலே பண்ணுறீங்க!”
குளிர்காயும் மக்கள்!

அங்கே சுடச்சுட தேநீர் குடித்து உடம்பிற்குக் கொஞ்சம் சூடேற்றிக் கொண்டபின் எங்கள் பயணம் தொடர்ந்தது. செல்லும் போதே வழியில் ஒரு பெரிய ஹனுமன் சிலையைப் பார்த்திருந்ததால் அங்கே சென்று ஹனுமனுக்கு ஒரு வணக்கம் சொல்ல அங்கே விரைந்தோம்.

 

பிரதான சாலையிலேயே 52 உயரத்தில் அசால்டாக நிற்கிறார் அனுமந்தலு. ஜம்முவில் உள்ள வைஷ்ணவ் தேவி கோவில் போலவே இங்கே செயற்கையாக குகை அமைத்து சுற்றுலாப் பயணிகளைக் கவர்கிறார்கள். பொதுவாகவே வட இந்திய கோவில்களுக்குச் செல்லும் போது ஏதோ கண்காட்சி பார்ப்பது போன்ற உணர்வு தான் எனக்குள் தோன்றும். இங்கேயும் அப்படியே! வெளியே நின்றபடியே அனுமனுக்கு ஒரு வணக்கம் செலுத்திவிட்டு பயணத்தினைத் தொடர்ந்தோம்.

 

அடுத்து நாங்கள் சென்ற இடத்திற்கும் குளிருக்கு இதமாய் நாங்கள் அருந்திய தேநீருக்கும் ஒரு தொடர்பு உண்டு. அது என்ன அடுத்த பதிவில் பார்க்கலாமா!

License

Share This Book

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *