11 பகுதி-11: நைனிதால் – மணி கட்டலாம் வாங்க!

அனுமந்தலு

சென்ற பகுதியில் பார்த்த ஒன்பது முனை ஏரியிலிருந்து புறப்படும் போது தேநீர் தோட்டத்திற்கும் அருகில் உள்ள ஒரு கோவிலுக்கும் செல்ல முடிவு செய்திருந்தோம். இந்த தேநீர் தோட்டம் இருக்கும் இடத்திற்குப் பெயர் [G]கோரா[kh]கால் என்பதாகும். இந்த [G]கோரா[kh]கால் தேயிலைத் தோட்டம் பற்றி கேள்விப்பட்டதும், என்னுடன் வந்திருந்த வட இந்திய நண்பர்கள் இருவருமே அங்கே செல்ல வேண்டும் என்பதில் ஆர்வத்துடன் இருந்தார்கள். வழியைக் கேட்டுக் கொண்டு அங்கே செல்வதற்குள் எங்கள் ஓட்டுனர் பப்புவுக்கு விழி பிதுங்கிவிட்டது.

 

குறுகிய, மற்றும் மண்ணால் போடப்பட்ட மலைவழிச் சாலைகளில் பயணிப்பது எங்களுக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. உத்திராகண்ட் அரசாங்கத்தினால் நிறுவப்பட்ட இந்த தேயிலைத் தோட்டத்தினை நாங்கள் சென்றடைந்த போது மாலை 05.30 – அதாவது தோட்டம் மூடும் நேரம். உள்ளே செல்ல ஆளுக்கு ஐந்து ரூபாய் கட்டணம் வாங்கிக் கொண்டு, ஐந்து நிமிடங்களில் வெளியே வந்துவிடும்படிச் சொன்னார் அங்கே இருந்த அலுவலர்.

 தேநீர்த் தோட்டத்திற்கு செல்லும் வழி…

விரைவாக உள்ளே சென்று, தேயிலையின் வாசனையை நாசியில் ஏற்றிக் கொண்டு வெளியே வந்தோம். அங்கே இருக்கும் மற்றொரு நபர், “நீங்க ரொம்பவே தாமதமா வந்ததால் உங்களால் முழுதும் சுற்றிப் பார்க்க இயலவில்லை, தேயிலை தயாரிப்புகளைப் பார்க்கவும் முடியாது. அதற்கு வருந்துகிறேன். காலையில் மீண்டும் வாருங்கள்” என்ரு சொன்னார். மேலும், அப்போது இருந்த குளிருக்கு, அங்கே தரும் சூடான தேநீர் எங்களுக்கு அமிர்தம் போல இருந்திருக்கும் எனச் சொன்னார் – வெந்த புண்ணில் வேல்! சரி நாளை முடிந்தால் வருகிறோம் எனச் சொல்லி அங்கிருந்து வெளியே வந்தோம்.

தேநீர் தோட்டத்திலிருந்து திரும்பும் வழியில் எடுத்த ஒரு படம்

நாங்கள் அடுத்ததாய்ச் சென்றது ஒரு கோவிலுக்கு. சரியாக மாலை நடக்கும் ஆரத்தியின் போது தான் அங்கே சென்றோம். மந்திர உச்சாடனம் போன்ற ஆரத்தி பாடல்களை பாடியபடி, பலர் மணிகளை ஒலிக்க அங்கே குடிகொண்டிருக்கும் கடவுளான [G]கோலு தேவதாவிற்கு சிறப்பான ஆரத்தி நடந்து கொண்டிருந்தது.

 

கும்பலோடு கோவிந்தாவாக நாங்களும் அங்கே நின்று தரிசனம் செய்தோம். ஆரத்தி நடக்கும்போதே இந்த கோவிலின் சிறப்பினைப் பார்த்து விடலாம் வாருங்கள். [G]கோலு தேவதா கோர பைரவ் அதாவது சிவனின் ஒரு அவதாரமாக நம்பப்படும் ஒரு கடவுள். உத்திராகண்ட் மாநிலத்தவர்கள் அனைவருமே இந்த [G]கோலு தேவதா மேல் அபாரமான நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். தங்களுக்கு ஏற்படும் எல்லா பிரச்சனைகளுக்கும் இவர் நீதி வழங்குவதாக நம்பிக்கை.

 

நமது நாட்டின் நீதிமன்றங்களில் வழக்குகளில் தீர்ப்பு கிடைக்க பல வருடங்கள் ஆகிறது. ஆனால் இந்த நீதி தேவனான [G]கோலு தேவதாவின் கோவிலில் முறையிட்ட சில தினங்களிலேயே நீதி கிடைப்பதாக இவர்களுக்கு நம்பிக்கை. தங்களது வழக்கினைப் பற்றி முத்திரைத் தாளில் எழுதி [G]கோலு தேவதாவின் கோவிலில் அவர் காலடியில் சமர்ப்பித்து தங்களது வேண்டுகோளை நிறைவேற்றும்படி மனதார வேண்டிக்கொண்டு செல்கிறார்கள். அவர்களது வேண்டுகோள் சரியானதாகவும், நியாயமானதாகவும் இருந்தால் நிச்சயம் அது நிறைவேற்றப்படும் என்பது இவர்களது அசைக்க முடியாத நம்பிக்கை.

 

வேண்டுகோள்கள் நிறைவேறியதன் அடையாளமாக இந்தக் கோவிலில் மணிகளை கட்டித் தொங்க விடுகிறார்கள். ஆயிரக் கணக்கில் சிறியதும் பெரியதுமாக மணிகள் கட்டித் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது பலரது வேண்டுகோள்கள் ஏற்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தொடர்ந்து மணி சப்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. அங்கே பல அளவுகளில் இருக்கும் மணிகளைப் பார்க்கும்போது நமக்கே ஒரு மணி கட்டத் தோன்றுகிறது!

 

நாட்டில் நடக்கும் அநீதிகள் பல இருக்கும்போது இந்த [G]கோலு தேவதா கோவிலில் வெண்கல மணிகள் கட்டுவது தொடர்ந்து கொண்டிருக்கும் எனத் தோன்றுகிறது! நல்ல ரம்மியமான சூழல் – மலைப்பகுதியில் அடிக்கும் குளிர் – காலுறை அணிந்திருந்தபோதும் கால்களின் வழியே உச்சி மண்டை வரை ஏறிய குளிர் – அங்கே அதிக நேரம் எங்களை நிற்க விடவில்லை. அங்கே நம்பிக்கையோடு ஆரத்தியை பாடி[?] கொண்டிருந்தவர்களுக்கு குளிர் ஒரு பொருட்டே இல்லை!

 

கிட்டத்தட்ட நூறு படிகளை ஓடியே கடந்து எங்கள் வாகனம் நின்றுகொண்டிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தோம். மலை மேலேயே குளிரின் காரணமாக இயற்கை உபாதைகள் இருக்க, அதை தீர்ப்பதற்கு எந்த விதமான வசதிகளும் இல்லாதது நமது நாட்டின் எல்லா பகுதிகளிலும் இருக்கும் ஒரு பிரச்சனை என்பது புரிந்தது! விரைந்து பயணித்து தங்குமிடத்தினை அடைய வேண்டியிருந்தது!

 

அடுத்தது என்ன என்பதை ஏரிகள் நகரம் தொடரின் பன்னிரெண்டாம் பகுதியில் பார்க்கலாமா!

Share This Book

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *