12 பகுதி-12: நைனிதால் – சிறிது வயிற்றுக்கும்……

தங்குமிடத்திற்கு வந்து கொஞ்சமாக ஓய்வெடுத்துக் கொண்டு இரவு உணவிற்காக மீண்டும் வெளியே வந்தோம். இரவு நேரமானதால் குளிர் கொஞ்சம் அதிகமாக இருந்தது. அப்போதைய வெட்ப அளவு 02.00 டிகிரி என ஒரு கடையில் இருந்த மானி காண்பித்துக் கொண்டிருந்தது. அணிந்திருக்கும் குளிர்கால உடைகளையும் தாண்டி நரம்புகளும் எலும்புகளும் நடுங்கிக் கொண்டிருந்தன!

 

நாங்கள் தங்கும் இடம் மால் ரோடு என அழைக்கப்படும் நைனிதால் நகரின் பிரதான சாலையில் அமைந்திருக்கிறது. மால் ரோடு முழுவதும் சுற்றுலா பயணிகளால் நிறைந்திருந்தது. அடிக்கும் குளிரை எவரும் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. பொதுவாகவே வட இந்தியர்களுக்கும், குளிர் பழகியவர்களுக்கும் குளிரை அனுபவிக்கத் தெரியும். என்னையும் சேர்த்து! ஆனால் என் உடன் வந்திருந்த கேரள நண்பர் தான் கொஞ்சம் தடுமாறிவிட்டார்.

 

நல்ல குளிரில் கோன் ஐஸ், கப் ஐஸ், குல்ஃபி போன்றவை விற்பனை கன ஜோராக நடந்து கொண்டிருந்தது! கூடவே [G]கோல் [G]கப்பா, ஆலு டிக்கி, போன்ற நொறுக்குத் தீனிகளும். சாலை ஓரங்களை இப்படிப்பட்ட சிறிய உணவகங்கள் ஆக்ரமித்திருக்க, பெரிய உணவகங்கள் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து தங்களது உணவகங்களை நோக்கி வரவேற்க விதம் விதமாக முயற்சி செய்கிறார்கள். ஒரு சிலர் இதற்கெனவே சிலரை நியமித்து இருக்க, அவர் போகும் அனைவரையும் அழைக்கிறார். சில இடங்களில் செயற்கை முயற்சிகளும்!

 

சாலை ஓர உணவகங்களையும், சாலையில் நடந்து கொண்டிருக்கும் சக சுற்றுலாப் பயணிகளையும் பார்த்தவாறே நாங்களும் நடந்து கொண்டிருந்தோம். மால் ரோட் முடிவடையும் இடத்தில் லால்கிலா என அழைக்கப்படும் செங்கோட்டை முகப்பில் தெரிய, ”தில்லியில் இருக்கும் செங்கோட்டை நைனிதாலில் எங்கே வந்தது?” என்ற கேள்வியுடன் மேலே கவனித்தோம் – அது ஒரு உணவகம் – பெயர் Chandni Chowk – பழைய தில்லியில் இருக்கும் ஒரு முக்கியமான இடம்.

 

தில்லியின் பழைய தில்லி பகுதியில் இருக்கும் Chandni Chowk உணவகங்களுக்கு பெயர் பெற்றது – அதுவும் அசைவ உணவு வகைகளுக்கு. கூடவே சைவ உணவகங்களும் அங்கே நிறைய உண்டு, முக்கியமாக ”பரான்டே வாலி கலி”. அதன் சுவையை நைனிதாலில் கொடுக்க முயற்சிக்கும் உணவகம் இது. வாசலில் நான்கு பெரிய பொம்மைகள் – ஒரு மோட்டார் மூலம் அசைந்த படியே இருக்கின்றன. ஒரு பக்கத்தில் சுடச்சுட பாலும் ஜிலேபியும் இருக்க, கூடவே [G]கோல் [G]கப்பா, ஆலு டிக்கி, கச்சோடி வகைகள்.

 

அதையெல்லாம் தாண்டி நாங்கள் நேரே உணவகத்தினுள் சென்றோம். நல்ல அலங்காரங்கள் – பழைய தில்லியை நினைவு படுத்தும் அமைப்புகள் – சப்பாத்தி மற்றும் Shahi Paneer, Daal Makkani, Alu Mutter, Dum Alu ஆகியவற்றை எங்களுக்கு தரச் சொல்லிக் கேட்டோம். சுற்றி முற்றி பார்த்தபோது உணவகம் முழுவதிலும் வாய்க்கும் கைக்கும் சண்டை நடந்து கொண்டிருந்தது! அனைவரும் உணவினை ருசித்து உண்பதைப் பார்த்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது.

சுடச்சுட பால்

சுடச் சுட சப்பாத்தி வந்த படியே இருக்க, அனைத்தையும் கபளீகரம் செய்தோம். நான்கு பேரும் இரவு உணவினை எடுத்துக் கொண்டபிறகு வெளியே வந்தோம். பழைய தில்லியின் பல பகுதிகளில் இருக்கும் பால் கடைகள் வெளியே இருக்க, அனைவரும் ஒரு டம்ளர் பால் அருந்தினோம். இங்கே ஒரு பெரிய கடாய் [வாணலி] – ஹிமாலய சைஸ் கடாய் – அதிகம் குழிவாக இல்லாமல் கிட்டத்தட்ட தாம்பாளம் போலவே இருக்கும் கடாய் – இதன் விட்டம் குறைந்த பட்சம் ஒன்றரை மீட்டர் இருக்கலாம் – பால் அதிலே விட்டு தொடரந்து சூடுபடுத்தியபடியே இருப்பார்கள்.

 

அதிலிருந்து ஒரு பெரிய டம்ளரில் – அரை லிட்டராவது பிடிக்கும் – பாலை விட்டு அதன் மேல் கடாயின் ஓரத்திலிருந்து படிந்திருக்கும் பாலேடுகளை எடுத்து போட்டு சுடச்சுட கொடுப்பார்கள். ஆஹா! என்னவொரு சுவை! தில்லியில் கூட இப்போதெல்லாம் இந்த பால் கடைகள் குறைந்து விட்டன. பழைய தில்லியில் மட்டும் இன்னும் சில இடங்களில் இருக்கின்றன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த மாதிரி இடத்தில் பால் குடிக்கிறேன்.

 

வெளியே வந்து அங்கிருந்து மீண்டும் மால் ரோடில் இருப்பவர்களை பார்த்தபடியே மெதுவாய் நடந்து எங்களது தங்குமிடத்திற்கு வந்து சேர்ந்தோம். இனி இரவு முழுவதும் ஓய்வு. நாளை எங்கே செல்ல வேண்டும் – இன்னும் நைனிதாலில் பார்ப்பதற்கு என்ன இடங்கள் இருக்கின்றன – நாங்கள் நைனிதாலில் இருந்தோமா இல்லை வேறெங்கும் சென்றோமா என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்!

Share This Book

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *