15 பகுதி-15: நைனிதால் – புலி வருது புலி வருது….

சென்ற பகுதியில் சொன்னது போல, ஓட்டுனர் பப்பு சென்ற வேகத்தில் வழியில் இருக்கும் ஒரு முக்கியமான சுற்றுலா தலத்தினை நாங்கள் பார்க்க முடியாது போனது. வழியில் இருக்கும் அறிவிப்பு பலகை “ஜிம் கார்பெட் நீர்வீழ்ச்சி” செல்லும் வழி என்று போட்டிருக்க, அதை தவற விட்டோம். சில கிலோ மீட்டர்கள் பயணித்த பிறகு மீண்டும் திரும்பிச் செல்ல எங்களுக்கும் மனதில்லை. அதனால் ஜிம் கார்பெட் நீர்வீழ்ச்சி பார்க்க முடியாமல் போனதில் எங்களுக்கு மன வருத்தம் தான். மௌனமாக அனைவரும் அமர்ந்திருக்க, ஓட்டுனர் அதீதமான வேகத்தில் எங்களை ராம் நகர் கொண்டு சேர்த்தார்.

கோசி நதியில் இருக்கும் பறவைக் கூட்டம்

ராம் நகர், உத்திராகண்ட் மாநிலத்தில் இருக்கும் ஓர் சிறு நகரம். நைனிதால் மாவட்டத்தில் இருந்தாலும் அத்தனை முன்னேற்றம் இல்லை. இன்னமும் பள்ளமும் மேடும் நிறைந்த சாலைகள், சின்னஞ்சிறு கடைகள், ஜுகாட் என்று சொல்லக்கூடிய வண்டிகள், தள்ளு வண்டிக் கடைகள் என ஒரு மாதிரியான சோம்பலுடன் இருந்தது. மக்கள் பகட்டான நகர வாழ்க்கைக்கு பழகவில்லை. கிராமத்து மனிதர்களுக்கே உரிய எளிமை இன்னமும் அவர்களிடத்தில் தங்கியிருப்பதை உணர முடிந்தது.

கோசி நதியின் குறுக்கே ஒரு அணை….

நகரினுள் நுழையுமுன் கோசி நதி எங்களை வரவேற்றது. அதன் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் ஒரு அணையின் வழியே நாங்கள் வரும்போது பலவிதமான பறவைகள் நீர் நிலையின் ஓர் ஓரத்தில் அமர்ந்து நதியில் வரும் மீன்களை தங்களது உணவாக மாற்றிக் கொண்டிருந்தது. உடனேயே நதி ஓரத்தில் நின்று பறவைகளை புகைப்படம் பிடிக்க நினைத்தாலும் முதலில் ராம் நகரில் இருக்கும் வன இலாகா அலுவலகத்திற்குச் சென்று காட்டுக்குள் செல்ல மதிய நேரத்திற்கான அனுமதியைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தினால் நேராக அந்த அலுவலகத்திற்கே வண்டியை விட்டோம்.

அலுவலகத்திற்குச் செல்வதற்கு முன் சில தகவல்களை இங்கே பார்த்து விடுவோம். ஜிம் கார்பெட் என்பது மிகப் பெரியதோர் வனப்பகுதி. கிட்டத்தட்ட 521 KM2 பரப்பளவு கொண்ட இந்த பூங்காவினை 1936 ஆம் ஆண்டு அமைத்தார்கள் – அப்போது இந்த வனப்பூங்காவிற்கு கொடுக்கப்பட்ட பெயர் ஹெய்லி தேசியப் பூங்கா. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இந்தப் பூங்காவின் பெயர் ராம்நகர் தேசியப் பூங்கா என மாற்றம் செய்யப்பட்டது.

 

1956-ஆம் ஆண்டு இந்த பூங்காவினை உருவாக்க முக்கிய காரணமாக இருந்த ஜிம் கார்பெட் பெயர் சூட்டப்பட்டது. ஜிம் கார்பெட் எழுதிய ”Man Eaters of Kumaon” எனும் புத்தகம் இதுவரை படிக்கவில்லையெனில் படித்துப் பாருங்கள். தமிழிலும் இந்தப் புத்தகம் தி.ஜே. ரங்கநாதன் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டது – கலைமகள் வெளியீடு – 1958. இந்த்த் தமிழ்ப் புத்தகம் இப்போது கிடைக்கிறதா என்பது தெரியவில்லை. ஆங்கிலத்தில் AMAZON.IN இல் கிடைக்கிறது.

 

இந்தப் பூங்காவினுள் செல்ல மொத்தம் ஐந்து வாயில்கள் உண்டு – அவற்றில் நான்கு மிக முக்கியமானவை – ஜீர்னா, துர்காதேவி, பிஜ்ராணி மற்றும் டாங்க்ரி என்பவை. ஐந்தாவது நுழைவு வாயில் சீதாப[வ]னி.

 

ஜீர்னா நுழைவாயில் ராம்நகரிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஜிம் கார்பெட் பூங்காவின் இப்பகுதியில் அருமையான இயற்கை சூழலும் அடர்த்தியான காடும் கொண்டது. இங்கே கரடிகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் என்று சொல்கிறார்கள். வருடம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் இப்பகுதிக்குள் செல்ல முடியும்.

 

துர்காதேவி நுழைவாயில் பகுதி ராம்நகரிலிருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மலைப்பாங்கான இப்பிரதேசத்தில் ராம்கங்கா நதி ஓடுகிறது. நடுவில் நதி ஓட அதன் ஓரங்களில் பயணம் செய்து வனவிலங்குகளைப் பார்க்க முடியும். இந்தப் பூங்காவினுள் செல்லும் வழியில் ஒரு அருங்காட்சியகமும் உண்டு. இந்த நுழைவாயில் வருடத்தில் 15 அக்டோபர் முதல் 30 ஜூன் வரை மட்டுமே திறந்திருக்கும். மழை காரணமாக மற்ற நாட்களில் இந்த நுழைவு வாயில் வழியே காட்டுக்குள் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியில்லை.

 

பிஜ்ராணி நுழைவுவாயில் தான் அதிகமான சுற்றுலாப் பயணிகள் தேர்ந்தெடுக்கும் பகுதி – இந்தப் பகுதியினுள் தான் புலி போன்ற விலங்குகள் அதிகம் நடமாடும் என்று சொல்லப்படுகின்றது. நாள் ஒன்றுக்கு காலை வேளையில் 30 வாகனங்களும் [வனத்துறையின் அனுமதி பெற்ற ஜீப்] அதே அளவு மாலையிலும் இந்த வனப்பகுதிக்குள் செல்ல அனுமதி தருகிறார்கள். இந்த பகுதியும் வருடம் முழுவதும் திறக்க மாட்டார்கள் – 15 அக்டோபர் முதல் 30 ஜூன் வரை மட்டுமே இந்த வாயில் வழியே செல்ல அனுமதி கிடைக்கும்.

 

டாங்க்ரி நுழைவுவாயில் நான்காவது முக்கியமான நுழைவுவாயில். இந்த நுழைவு வாயிலும் வருடத்தில் 15 நவம்பரிலிருந்து 15 ஜூன் வரைதான் திறந்திருக்கும். இரவு நேரத்தில் தங்கும் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே இந்த நுழைவு வாயில் வழியே அனுமதிக்கப்படுவார்கள்.

 

இப்படி நான்கு முக்கிய நுழைவு வாயில்களும் வருடம் முழுவதும் திறந்திருக்கும் சீதாப[வ]னி நுழைவு வாயிலும் இருக்க, பிஜ்ராணி நுழைவுவாயில் வழியே செல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு வன இலாகாவின் அலுவலகத்தினை சென்ற்டைந்தோம்.

 

அங்கே எங்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. என்ன அதிர்ச்சி? அடுத்த பகுதியில் பார்க்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *