16 பகுதி-16: நைனிதால் – அதிர்ச்சி தந்த முன்பதிவு

எங்கள் வாகனத்தினை வன இலாகா அலுவலகத்தின் முன்னே நிறுத்தி நாங்கள் நால்வரும் அலுவலகத்திற்குள் சென்றோம். அங்கே இருந்த வரவேற்பறையில் இருந்த பெண்மணியிடம் வனத்தினுள் செல்ல அனுமதி வேண்டும், எவ்வளவு பணம் கட்ட வேண்டும் எனக் கேட்க, எங்களை மேலும் கீழும் பார்த்து விட்டு, முன்பதிவு செய்த எண் எங்கே என்று கேட்க, நாங்கள் திருதிருவென முழித்தோம்.

 

தொடர்ந்து அவர், ஜிம் கார்பெட் வனத்தினுள் செல்ல முக்கியமான நான்கு நுழைவு வாயில்களுக்கும் கணினி மூலம் முன்பதிவு செய்திருக்க வேண்டும் என்பதை எங்களுக்குத் தெரிவித்தார். எங்களுக்குத் தெரிந்த வன இலாகா அதிகாரிகளில் ஒருவருக்கு தொலைபேசியில் அழைத்து ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று கேட்க, அவரோ, “எப்ப போகணும்?” என்று கேட்டார்! நாங்கள் அங்கே இருக்கும் விவரத்தினைச் சொல்ல, இப்போது இருக்கும் நிலையில் ஒன்றும் செய்ய முடியாது ஒரு நாள் அவகாசம் கொடுத்தால் அடுத்த நாள் பயணத்திற்கான ஏற்பாடு செய்ய முடியும் என்று சொல்லிவிட்டார்.

 

எங்களுக்கு அன்று இரவு புறப்பட்டு தில்லி வந்து சேர வேண்டிய கட்டாயம் – திங்களன்று அலுவலகம் சென்றாக வேண்டும். கேரளத்திலிருந்து வந்த நண்பருக்கும் திங்களன்று விமானத்தில் முன்பதிவு செய்யப்பட்டிருக்க கொஞ்சம் யோசித்தோம். ஞாயிறு இரவு அங்கே தங்கி, திங்கள் மதியம் வனத்திற்குள் சென்று செவ்வாய்க் கிழமை காலை தான் தில்லி வந்து சேர முடியும் என்பதால் வேறு என்ன செய்ய முடியும், என்று கேட்க, கடைசி நேரத்தில் ஒன்றும் செய்ய முடியாது, வேண்டுமானால் சீதாவனி பகுதிக்குச் சென்று வாருங்கள் என்று சொல்லி விட்டார்.

 

சீதாவனி என்பதும் ஜிம் கார்பெட் வனத்தில் ஒரு பகுதி தான். ஆனால் அந்தப் பகுதி வனத்தினுள் புலிகளைக் காண்பது மிகவும் அரிதான விஷயம் என்றும், மான்கள், நரி போன்ற சில விலங்குகள் மட்டுமே அங்கே உங்களுக்குக் காணக் கிடைக்கும் என்றும் சொன்னார்கள். மதியம் ஒரு மணியே ஆன நிலையில் என்ன செய்வது என்ற குழப்பத்துடன் வெளியே வந்தோம். வெளியே வந்த எங்களை வனத்திற்குள் அழைத்துச் செல்லும் பல ஜீப் ஓட்டுனர்கள் முற்றுகையிட்டார்கள். அவர்களுக்கு நாங்கள் முன்பதிவு செய்யாதவர்கள் என்று தெரிந்ததும் விலகிவிட்டார்கள்.

 

ஆனாலும் ஒரு சிலர், நீங்கள் சீதாவனி பகுதிக்குச் செல்லலாம் என்று அழைக்க, ஒரு சிலர் அங்கே ஒன்றும் இல்லை நீங்கள் போக வேண்டாம் என்று சொல்ல குழப்பம் மட்டுமே மிஞ்சியது. இந்தப் பயணத்தில் சென்ற நான்கு பேரில் எனக்கும் கேரள நண்பருக்கும் முன்னரே வனப் பகுதிகளில் சென்ற அனுபவம் உண்டு. மற்ற இருவருக்கும் வனப்பகுதிக்குள் சென்ற அனுபவம் இல்லாததால் சீதாவனி பகுதிக்குள் செல்லலாம் என முடிவு செய்தோம்.

 

அதனால் ஜீப் உரிமையாளர் ஒருவரிடம் பேசினோம். அவர் சீதாவனி பகுதிக்குள் சென்று திரும்பி வர 2000 ரூபாய் ஆகும் என்று சொன்னார். கொஞ்சம் அவரிடம் பேசி 1500 ரூபாய் மட்டுமே தருவோம் என்று சொல்ல, அவரும் ஒத்துக் கொண்டார். இதில் வன இலாகவிற்குக் கட்ட வேண்டிய 400 ரூபாயும் அதில் அடக்கம். முதலில் மதிய உணவை முடித்துக் கொண்டு வந்து விடுங்கள், அதற்குள் ஓட்டுனரை அழைத்துவிடுகிறேன் என்று அவர் சொல்ல, நாங்கள் மதிய உணவினை சாப்பிட நகரினுள் சென்றோம்.

 

மதிய உணவினை நாங்கள் சாப்பிடும் நேரத்திற்குள் இந்த ஜிம் கார்பெட் செல்ல முன்பதிவு செய்ய வேண்டிய தளம் எது என்ற விவரங்களை உங்களுக்குச் சொல்லி விடுகிறேன்.

 

வனத்தினுள் இருக்கும் வன இலாகா பங்களாவிற்கும், ஜீப் [அல்லது ] Canter வாகனம் மூலம் வன உலா வருவதற்கும், யானை மேல் அமர்ந்து வனத்திற்குள் செல்ல வேண்டும் என்றாலும் அனைத்துமே கீழ்க்கண்ட தளத்தின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

 

http://www.onlinecorbettbooking.com/

 

வன இலாகாவினரே ஜிம் கார்பெட்டினுள் செல்ல Tour Packages ஏற்பாடு செய்கிறார்கள் – அந்த விவரங்கள் இந்தச் சுட்டியில் இருக்கின்றன.

 

நீங்கள் எப்போது ஜிம் கார்பெட் செல்ல முடிவு செய்தாலும் ஒரு மாதம் முன்னரே முன் பதிவு செய்து விடுவது நல்லது. இல்லையெனில் அங்கே சென்ற பிறகு ஏமாற்றமே மிஞ்சும்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial 4.0 International License

ஏரிகள் நகரம் - நைனிதால் by வெங்கட் நாகராஜ் is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License, except where otherwise noted.

Share This Book

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *