18 பகுதி-18: நைனிதால் – காட்டுக்குள் விஷஜந்துக்கள்

எங்கள் ஓட்டுனர் வீரப்பன் கடவுச்சீட்டை வாங்கிக் கொண்டு ஜீப்பினை காட்டுக்குள் செலுத்தினார். காட்டுக்குள் செல்ல பாதி தூரம் வரை நல்ல பாதை உண்டு. அதில் வேகமாகச் சென்றது ஜீப் – வேகம் என்றால் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகம் தான் – அதற்கே சரீரம் முழுவதும் குலுங்குவது போன்ற உணர்வு – சாலை அப்படி!

பொதுவாகவே வனப்பகுதிகுள் செல்லும்போது மனிதர்கள் மிகவும் அமைதியாக இருக்க வேண்டும் – அப்போது தான் விலங்குகள் பயப்படாமல் வெளியே வரும். போலவே காற்றில் அசையும் இலைகளின் சலசலப்பு, எங்கேயோ ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீரின் ஓசை, ஆங்காங்கே குரல் கொடுக்கும் பறவைகளின் இன்னிசை கீதங்கள், எங்கிருந்தோ வரும் விலங்குகளின் சம்பாஷணைகள் ஆகியன கேட்க முடியும். அதை ஊர்ந்து கவனித்து ரசிக்கவும் முடியும்.

இந்த வனப்பகுதிக்குள் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாது மனிதர்கள் நுழைந்து விடுவதால், காட்டுக்குள் வந்த உடன் மனிதர்களுக்கு ஏதோ ஆகிவிடுகிறது. ஏதோ ஒரு டிஸ்கோத்தே போய் இரவு முழுவதும் அதீத சத்தமாக வெளிவரும் குத்துப் பாடல்களுக்கு கையில் சாராய புட்டிகளோடு ஆட்டம் போடுவது போல இந்த வனப்பகுதிக்குள் ஆட்டம் போடுவதைக் காண முடிந்தது. காட்டின் நடுவே ஓடும ஒரு சிற்றோடையின் அருகே அப்படி ஒரு கும்பலைக் காண முடிந்தது.

வனத்தின் அமைதியைக் குலைத்தபடி ஓசை வர கவனித்தோம் – ஒரு கார் – நான்கு கதவுகளும் திறந்திருக்க, அந்த வாகனத்தில் பொருத்தியிருக்கும் சி.டி. ப்ளேயரில் இருந்து பஞ்சாபி/ஹிந்தி பட குத்துப் பாடல்கள் அதன் உச்ச வரம்பு சத்தத்தில் அலறிக் கொண்டிருந்தது. காரில் இருந்து இறங்கி நின்ற இளைஞர்கள் அனைவரது கையிலும் சோம பான வகைகள்.

போதையேறிய ஒரு இளைஞர் போதையில், தலையில் பாட்டிலை வைத்துப் பிடித்துக் கொண்டு நடனமாடிக் கொண்டிருந்தார். எங்கள் கையிலிருந்து கேமராக்களைப் பார்த்து இன்னும் கொஞ்சம் அதிகம் ஆடியதோடு விதம்விதமாக போஸ் கொடுத்து புகைப்படம் எடுக்கச் சொன்னார். அவர்களின் நிலை கண்டு சிரித்தபடியே நாங்கள் நகர ஆரம்பித்தோம். பாட்டில்களை ஆங்காங்கே விசிறி உடைத்துப் போட்டார்கள்! அதை உடைப்பதில் அப்படி ஒரு ஆனந்தம் அவர்களுக்கு.

காட்டுப் பகுதிக்குள் வந்து இப்படி கண்ணாடிகளை உடைத்துப் போடுவது அந்த இடத்தில் உலா வரும் விலங்குகளுக்கு தொந்தரவு தரும் என்பதோ, வீசும் நெகிழி பைகளை உண்டு விலங்குகள் தங்களது முடிவினை கண்டுவிடக்கூடும் என்பதோ இந்த மனிதர்களுக்கு உறைக்கவே இல்லை. காட்டிலே இருக்கும் விஷம் கொண்ட பூச்சிகளை விட இந்த மனித ஜந்துக்கள் பரப்பும் விஷம் அதிகம் என்ற நினைவுடனே பயணித்தோம்.

கொஞ்சம் அடர்ந்த வனப்பகுதிக்குள் வந்து விட்டோம். ஆங்காங்கே சில காலி இடங்கள். அவற்றின் அருகே வரும்போது வாகனம் ரொம்பவும் குறைவான வேகத்தில் சத்தமே வராத மாதிரி பயணிக்கிறது. ஓட்டுனர் வீரப்பனின் பழக்கப்பட்ட கண்கள் அங்கும் இங்கும் அலைபாய்கிறது. காட்டு வழியில் ஒரு நரியைப் பார்த்து விட எங்களிடம் அதைக் காண்பித்த்தோடு அங்கே வாகனத்தினை நிறுத்தினார். நரி எங்களை சில நொடிகள் பார்த்தபின் “சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்” என்ற எண்ணத்தோடு காட்டுக்குள் ஓடி ஒளிந்தது.

எத்தனை விதமான மரங்கள். அவற்றிலிருந்து தானாக ஒடிந்து விழும் கிளைகளைக் கூட ஒருவரும் எடுப்பதில்லை. அந்தக் கிளைகளை சுற்றி கரையான் போன்ற புழுக்கள் கட்டிய மண் வீடுகள், அவைக் கட்டி முடித்தபின் அதாவது உள்ளே இருக்கும் மரம் முழுவதும் அரித்துத் தின்று முடித்தபின் வீட்டைக் காலி செய்துவிட, அங்கே பாம்புகள் குடியேறிவிடுமாம். உள்ளே சென்று வெளியே வர ஏதுவாய் ஓரிரு வழிகளும் இருக்க, ஒரு துவாரம் வழியே பாம்பு தலையை வெளியே நீட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. நாக்கை நீட்டி நீட்டி உள்ளே இழுத்துக் கொள்ள, ஏதோ எங்களைப் பார்த்து சொல்வது போல தெரிந்தது – ஒருவேளை, எங்களைப் பார்க்க வந்ததில் மகிழ்ச்சி எனச் சொல்லி இருக்குமோ?

மேலும் சில நிமிடங்கள் கழித்து வாகனத்தினை மீண்டும் நிறுத்தினார் வீரப்பன். எதற்கு என கண்களை நாலா பக்கமும் சுழற்ற சற்றே அருகில் ஒரு மான் கூட்டம். நாங்கள் சத்தம் எழுப்பாமல், நின்று வனாந்தரத்தில் சுதந்திரமாய்த் திரியும் மான் கூட்டத்தினைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தோம்.     நண்பர் தன்னுடைய NIKON CAMERA-வில் படங்கள் எடுக்க, நான் எனது CANON-ஐ பயன்படுத்திக் கொண்டிருந்தேன். சில நிமிடங்கள் அந்த மான்களுக்கு தாங்கள் படம்பிடிக்கப் படுகிறோம் எனத் தெரியவில்லை.

 

தொடர்ந்த க்ளிக் சப்தங்கள் புற்களை மேய்ந்து கொண்டிருக்கும் அந்த மான்களின் கவனத்தினை ஈர்க்க, எங்களை கவனித்து விட்டன. உடனே அடடே இந்த மனிதர்கள் நம்மைப் பார்த்து விட்டார்களே என்ற எண்ணத்துடன் காட்டுக்குள் இருந்த புதர்களுக்குள் ஓடி ஒளிந்தன. அங்கிருந்தபடியே எங்களை நிச்சயம் கவனித்துக் கொண்டிருக்கும் என்ற நினைவுடன் அங்கிருந்து நகர்ந்தோம்.

 

காட்டுப்பாதையில் பயணித்துக் கொண்டே இருந்தோம் – அருகே தண்ணீர் ஓடிக்கொண்டிருகும் ஓசை கேட்க, ஆவலுடன் அந்த சப்தம் கேட்கும் இடம் வந்துவிடாதா என பார்த்துக் கொண்டிருந்தோம். அந்த இடமும் வந்தது – கோசி ஒரு சிற்றோடை போல ஓடிக்கொண்டிருந்தாள். ஒரு இடத்தில் குறுகிய நதியின் குறுக்கே கருங்கற்கள் கொண்டு பாதை அமைந்திருக்க, அந்த வழியின் மூலம் கோசியைக் கடக்கப் போகிறோம். அதற்கு முன்னர் அங்கே சற்றே இளைப்பாறுவோமா?

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial 4.0 International License

ஏரிகள் நகரம் - நைனிதால் by வெங்கட் நாகராஜ் is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License, except where otherwise noted.

Share This Book

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *