2 பகுதி-2: நைனிதால் – தங்குவது எங்கே?

பகுதி 2: நைனிதால் தங்குவது எங்கே?

ஏரிகள் நகரம் பகுதி ஒன்றில் நைனிதால் சுற்றுலா செல்வது பற்றி எழுதி இருந்தேன். தில்லியிலிருந்து நைனிதால் செல்லும் வழியில் [G]கஜ்ரோலா எனும் இடத்தில் இரவு உணவை முடித்துக் கொண்டு பயணத்தினைத் தொடர்ந்தோம். எங்கள் வாகன ஓட்டுனர் பப்பு – சுமார் ஐம்பது வயதிருக்கலாம், மிகச் சிறப்பாக வாகனத்தினை செலுத்திக் கொண்டிருந்தார். இரவு நேரம் அதுவும் நல்ல குளிர்காலம் என்பதால் நெடுஞ்சாலையில் அத்தனை வாகனப் போக்குவரத்து இல்லை. மணிக்கு 90-100 கிலோமீட்டர் வேகத்தில் வண்டியைச் செலுத்தி நைனிதால் நகரின் புகழ்பெற்ற மால் ரோடு எனும் இடத்தினை நாங்கள் சென்றடைந்தபோது அதிகாலை இல்லை பின்னிரவு மூன்றரை மணி.

நைனிதால் நகரின் புகழ் பெற்ற மால் ரோடு….

நைனிதால் நகரமே தூங்கிக் கொண்டிருந்தது. அன்றைய தினம் நல்ல குளிர். போதாத குறைக்கு ஹல்த்வானி நகர் தாண்டியபிறகு ஆரம்பிக்கும் மலைப் பாதைகளில் நல்ல மழை. நடுவே சில இடங்களில் ”ஓலே” எனச் சொல்லப்படும் பனிக்கட்டி மழை. மிகவும் பரப்பான ஒரு பயணமாக அமைந்தது. அற்புதமான அனுபவத்துடன் நாங்கள் மால் ரோடு அடைந்தபோது அந்த ராத்திரி வேளையிலும் மால்ரோடு ஆரம்பிக்கும் இடத்தில் ஒருவர் வாகனங்கள் நுழைவுக் கட்டணம் வாங்கிக் கொண்டிருந்தார்.

தங்கும் விடுதியிலிருந்து – பார்க்கும்போதே பரவசமூட்டும் – நைனா ஏரியும் மலையும்….

மற்ற சுங்கச் சாவடி போல் அல்லாது, இங்கே ஒவ்வொரு முறை செல்லும்போதும் 100 ரூபாய் கொடுக்க வேண்டும் – ஒரு நாளைக்கு பல முறை இந்த வழியாகத்தான் செல்ல வேண்டியிருக்கும்! அவரிடம் நுழைவுக் கட்டணத்தினைக் கொடுத்து விட்டு உள்ளே நுழைந்தது எங்கள் வாகனம். மால் ரோடு என்பது நைனா ஏரிக்கரையில் உள்ள ஒரு சாலை. ஏரியின் அந்தப் பக்கம் முழுவதும் மலை. இரவின் நிசப்தத்தில் ஏரியில் ஒரு மீன் துள்ளிக் குதித்தால் கூட அந்தச் சத்தம் கேட்கும் படி இருந்தது. மற்ற பக்கத்தில் மலையன்னை மிக அழகாய் துயில் கொண்டிருந்தாள். துயிலாது இருந்தது எங்கள் பயணக் குழுவினரும் இன்னும் மிகச் சில ஹோட்டல் பணியாளர்களும் தான்.

நைனா ஏரி மற்றும் மலை – வேறொரு கோணத்தில்…

மால் ரோடில் பலவிதமான தங்கும் இடங்கள் உண்டு. சாலை முழுக்கவே உணவகங்களும், தங்குமிடங்களும் தான். நாங்கள் நான்கு ஆண்கள் மட்டுமே சென்றதால் நைனிதால் சென்றபிறகு ஏதோ ஒரு தங்குமிடத்தில் இடம் நிச்சயம் கிடைக்கும் என்று சென்றோம். சாலையில் இருக்கும் ஒவ்வொரு தங்குமிடமாகச் சென்று விசாரிக்கத் துவங்கினோம். ஒரு இடத்தில் தங்கும் அறை நன்றாக இருந்தால் வாடகை மிக அதிகமாக இருந்தது. வாடகை சற்றே குறைவாக இருந்தால் அறை மிக அசிங்கமாக இருந்தது.

தங்குமிடம் ஒன்றின் வெளிப்புறச் சுவரில் இருந்த படம்….

ஒரு இடத்தில் வாடகை எவ்வளவு என்று கேட்க, நான்கு பேர் தங்கும் அறைக்கு நாளொன்று 8500 ரூபாய் என்று சொன்னார். இங்கே பொதுவாக சீசன் என்று சொன்னால், கோடைக்காலம் தான். அப்போது தான் இந்த அளவிற்கு வாடகை இருக்கும். நாங்கள் சென்றது போல, நல்ல குளிர்காலத்தில் சென்றால் இந்த கட்டணத்தில் 30% வரை குறைத்துக் கொடுப்பார்கள். ஆனால் இத்தனை விலை கொடுத்தும் அவர்கள் எங்களுக்காக காட்டிய அறை ஏரியை நோக்கி இல்லாது பின்புறத்தில் இருந்தது.

மலையில் இருக்கும் ஒர் RESORT….

அதனால் எங்கள் படையெடுப்பினைத் தொடர்ந்தோம். அடுத்ததாக பார்த்த தங்குமிடம் நன்றாகவும் இருந்தது. ஏரியை நோக்கிய அறைக்கு குளிர்கால வாடகையாக நாளொன்றுக்கு ரூபாய் 1850 மட்டும் [வரிகள் தனி]. சரி என அந்த அறையினை அமர்த்திக் கொண்டு விட்டோம். எங்கள் உடமைகளை வாகனத்திலிருந்து எடுத்துக் கொள்ள, வாகன ஓட்டி பப்பு மால் ரோடின் முடிவில் உள்ள அவரது நண்பரின் இல்லத்திற்குச் சென்றார். காலையில் மெதுவாக வந்தால் போதும் எனச் சொல்லி விட்டு, நாங்கள் அறைக்குச் சென்றோம்.

பனிபடர்ந்த சிகரம் – தங்குமிடத்திலிருந்து எடுத்த புகைப்படம்…

குடும்பத்துடன் நைனிதால் செல்வதாக இருந்தால், அதுவும் இரவு வேளையில் இங்கே சென்றால், நீங்கள் முன்கூட்டியே தங்குமிடத்தினை முடிவு செய்து முன்பதிவு செய்து விடுவது நல்லது. இணையத்தில் பல தங்குமிடங்களின் சுட்டிகள் இருக்கின்றன. அவற்றில் காண்பிக்கும் அறைகளுக்கும், நேரில் பார்க்கும் அறைகளுக்கும் நிறையவே வித்தியாசம்! இருந்தாலும், முன்னேற்பாடு செய்துவிட்டு செல்வது நல்லது.

இந்த அமைதியைக் குலைக்க ஆசை வருமா?

நாங்கள் தங்கிய இடத்தின் பெயர் Hotel Gurdeep. இணையத்தில் இந்த தங்குமிடம் பற்றிய விவரங்களைப் பார்க்க முடியும். படத்தில் ரொம்பவே அழகாய் இருந்தாலும், நேரில் பார்க்கும்போது ஓகே ஓகே ரகம் தான். கேமராவின் கண்கள் வழியே பார்க்கும்போது எல்லாமே அழகுதானே! நாங்கள் முதலில் பார்த்த ஒரு தங்குமிடத்தின் பெயர் “Hotel Classic The Mall” இங்கே தான் நான்கு பேர் தங்கும் அறைக்கு 8500 ரூபாய் வாடகை சொன்னார்கள். இது போல பல தங்குமிடங்கள் நைனிதாலில் உண்டு. மலைகளில் சில Resort-களும் இயங்குகின்றன என்றாலும் அங்கே தங்குவதற்கான வாடகை சற்றே அதிகம் தான்!

 

நாங்கள் தேர்ந்தெடுத்த அறையில் நண்பர்கள் விட்ட தூக்கத்தினைத் தொடர ஆரம்பித்தார்கள். அறையின் வெளியே நின்று சில நிமிடங்கள் அமைதியான அந்த ஏரிக்கரையினையும், மலைகளையும் பார்த்துக் கொண்டிருந்தேன். என்ன ஒரு அமைதி அங்கே நிலவியது. நாங்கள் சென்ற காரணமோ என்னமோ பனிப்பொழிவும் ஆரம்பித்திருந்தது. வானத்திலிருந்து யாரோ ஒரு பஞ்சுப் பொதியை அவிழ்த்து விட்டாற்போல, பஞ்சு பஞ்சாய் பறந்து நிலத்தினை நோக்கி வீழ்ந்து கொண்டிருந்தது. அப்படியே நின்று ரசிக்கலாம் என்றால் தட்பவெட்பத்தின் காரணமாக உடல் நடுங்க ஆரம்பித்தது.

 

அறையினுள் வந்து நானும் நித்ரா தேவியின் தாலாட்டில் உறங்க ஆரம்பித்தேன். எட்டு மணிக்காவது எழுந்திருக்க வேண்டும் என நினைத்தபடியே உறங்கினேன். எழுந்தது எத்தனை மணிக்கு……? அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

 

 

License

Share This Book

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *