20 பகுதி-20: நைனிதால் – பயணம் – முடிவும் செலவும்

சிறிது நேரம் அந்தக் காட்டிற்குள் இருந்தது ரம்மியமானதாக இருந்தது. இப்படி வனப் பகுதிக்குள் செல்வது இது மூன்றாவது முறை. மத்தியப் பிரதேசத்தில் இருக்கும் ஷிவ்புரி மாவட்டத்தின் மாதவ் தேசியப் பூங்காவிற்கும், மத்தியப் பிரதேசத்தின் இன்னுமொரு வனமான பாந்தவ்கர் வனப் பிரதேசத்திற்கும் சென்று வந்தது குறித்து எனது வலைப்பூவில் [www.venkatnagaraj.blogspot.com] எழுதி இருக்கிறேன்.

 

காட்டிற்குள் கிடைத்த சுகாபனுவத்தினை மீண்டும் அசைபோட்டபடியே வாகனத்தில் அமர்ந்தோம். போகும்போது தொடர்ந்து பேசிக் கொண்டிருந்த ஓட்டுனர் வீரப்பனும் காட்டின் அமைதியை முழுதாக நாங்கள் உணர வேண்டும் என்ற நோக்கத்தினுடனோ என்னமோ பேசாமல் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார். மீண்டும் காட்டுப் பாதைகளில் மாலைச்சூரியன் தனது கதிர்களை மரங்களுக்கு ஊடே பாய்ச்சி விளையாட நாங்களும் அமைதியாக அந்த இயற்கையின் எழிலை ரசித்தபடி ராம் நகரில் இருக்கும் வன இலாகா அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தோம்.

 

அங்கே தில்லியில் இருந்து எங்களை தனது வாகனத்தில் அழைத்து வந்த ஓட்டுனர் பப்பு காத்திருக்க, ராம்நகரிலிருந்து புறப்பட்டோம். புறப்படும் முன் ஜிம் கார்பெட் வந்த அடையாளமாக ஏதாவது பொருள் வாங்கலாம் என்று Souvenir Shop தேடினோம். சில கடைகளில் தொப்பி, சாவிவளையம், டீ-ஷர்ட் என்று விற்றார்கள் – நன்றாக இல்லை, விலையும் மிக அதிகம். ஒரு டீ-ஷர்ட் மட்டும் வாங்கிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம். வழியில் தேநீர் அருந்தி, தில்லியை நோக்கிய பயணம் தொடர்ந்தது.

 

பயணத்தில் சின்னச் சின்னதாய் அனுபவங்கள்…. பொதுவாகவே வடக்கில் வாகனங்கள் ஓட்டுவதில் நிறைய இடர்கள் – எல்லோரும் தான் மட்டுமே முன்னால் செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள். Traffic Jam அவ்வப்போது ஏற்படும் ஒரு விஷயம் – நெடுஞ்சாலைகளில் மூன்று, நான்கு மணி நேரத்திற்கும் மேலாக இப்படி மாட்டிக் கொண்டதுண்டு. இருக்கும் குறுகிய சாலையில் இரண்டு ட்ரையிலர் மாட்டிய ஒரு ட்ராக்டர் – முழுவதும் கரும்பு இருக்க, சாலையில் நிறுத்தி விட்டு எங்கேயோ சென்றிருந்தார். ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஒரே இடத்தில் நிற்க வேண்டியிருந்தது!

 

நல்ல வேகத்தில் வாகனத்தினை ஓட்டிக் கொண்டு வந்த பப்பு இரவு உணவிற்காக போகும் போது நிறுத்திய அதே கஜ்ரோலாவில் நிறுத்தினார். உணவு முடித்து தில்லி நோக்கி பயணித்தோம். இரவு பன்னிரெண்டு மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம். இரண்டு நாட்கள் பயணமாகச் சென்று அந்த இரண்டு நாட்களில் பார்த்த இடங்கள், எங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள் ஆகியவற்றை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சி. உங்களுக்கும் மகிழ்ச்சி கிடைத்திருக்கும் என நம்புகிறேன்.

 

இந்தப் பயணத்திற்கான மொத்த செலவு – நான்கு பேருக்கு – ரூபாய் 19500/-. இதில் வாகனத்திற்கான செலவு, உணவு, தங்குமிடம் ஆகிய அனைத்தும் அடக்கம். தில்லியிலிருந்தே வாகனம் அம்ர்த்திக்கொண்டதால் கொஞ்சம் செலவு அதிகம் – ரயிலில் சென்றிருந்தால் சற்றே குறைந்திருக்கலாம் – ஆனாலும் வசதிகளும் குறைந்திருக்கும். இரண்டு நாட்கள் கிடைத்த மகிழ்ச்சிக்கும் அனுபவங்களுக்கும் இந்த செலவு ஒன்றும் அதிகமில்லை என்று தான் தோன்றியது.

இந்தப் பயணம் பற்றிய தொடரினை வாசித்து என்னுடன் பயணித்த உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. பயணங்களில் கிடைக்கும் அனுபவங்கள், காணக்கிடைக்கும் காட்சிகள், சந்திக்கும் புதிய மனிதர்கள் என பல காரணங்கள் இருப்பதால் தொடர்ந்து பயணிப்போம்….

ஆதலினால் பயணம் செய்வீர்!

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial 4.0 International License

ஏரிகள் நகரம் - நைனிதால் by வெங்கட் நாகராஜ் is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License, except where otherwise noted.

Share This Book

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *