5 பகுதி-5: நைனிதால் – தற்கொலை[க்கு] முனை[யாதே]!

தற்கொலை முனைக்குச் செல்லும் பாதை….

மலைவாசஸ்தலங்களுக்குச் செல்லும்போது பார்த்திருக்கிறீர்களா? அந்த ஊரில் நிச்சயம் ஒரு Suicide Point இருக்கும்! அது ஏனோ மலைக்கு வரும் எல்லோரும் அங்கே செல்வதே இதற்காகத்தானோ என்பது மாதிரி. தமிழகத்தின் கொடைக்கானலிலும் ஒரு தற்கொலை முனை உண்டு. நைனிதாலும் இதற்கு விதிவிலக்கல்ல….. இங்கேயும் ஒரு தற்கொலை முனை உண்டு. இது போன்ற இடங்களுக்குப் பொதுவான கதைகளும் உண்டு. முதலில் நைனிதால் தற்கொலை கதையைப் பார்க்கலாம்!

”மலையோரம் மயிலே….  விளையாடும் குயிலே…” என்று பாடத் தோன்றுகிறதா?

சில வருடங்களுக்கு முன் ஒரு நாள் அதிகாலைப் பொழுது. நல்ல பனிக்காலம். மலைப் பிரதேசத்தில் அடர்த்தியான பனிமூட்டம். [G]கோ[d]டா நிறுத்தம் வரை நடந்தே வந்தது ஒரு ஜோடி. எந்த வித பேரமும் பேசாது குதிரைக்காரர் சொன்ன பணத்தினைக் கொடுத்து விடுவதாகச் சொல்லி சைனா பீக் பார்த்து வந்தார்களாம். திரும்ப வரும்போது தங்களது பயணத்தினைத் துவக்கிய இடத்தில் விடாது அதன் அருகே இருக்கும் மற்றொரு சுற்றுலாத் தலமான தற்கொலை முனைக்கும் அழைத்துச் செல்லச் சொல்லியிருக்கிறார்கள் அந்த ஜோடி. கொஞ்சம் அதிகப் பணம் வேண்டும் என குதிரைக் காரர் கேட்க அதற்கும் ஒப்புக் கொண்டு தற்கொலை முனைக்கு வந்து விட்டார்கள். அவ்விடம் வந்ததும் இறங்கி நேராக தற்கொலை முனைக்கு சென்ற இளம் ஜோடி சிறிது நேரம் ஒருவரை ஒருவர் அணைத்தபடி நின்று கொண்டிருந்தார்களாம்!

 

குதிரையை ஒரு ஓரத்தில் கட்டி வைத்து பணம் வாங்க வந்த குதிரைக்காரர் அவர்களை பார்த்தபடி இருக்க, சில நொடிகளில் அங்கே இருந்த கம்பித் தடுப்புகளின் மேலே ஏறி குதித்து விட்டார்களாம்! பணமும் கொடுக்காது குதித்து விட்டார்கள்…. மேலும் இங்கே இருந்தால் காவல்துறை கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டுமென்று அங்கிருந்து காதல் ஜோடியை திட்டியபடியே திரும்பி வந்தாராம் குதிரைக்காரர்.

 

என்ன! கதை கேட்டாச்சா? இது உண்மையோ பொய்யோ, இது போன்ற பல கதைகள் ஒவ்வொரு தற்கொலை முனையிலும் உண்டு. இறைவன் கொடுத்த உயிரை தாமாகவே மாய்த்துக் கொள்வதில் என்ன லாபம். எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் அதை சமாளிப்பதில் தான் திறமை இருக்கிறது. அதை விட்டு தற்கொலை செய்து கொள்வது கோழைத்தனம் அல்லவா?

‘மேகம் கருக்குது… மின்னல் வெடிக்குது…’ அப்படின்னு சொல்ல ஆசை… 

நாங்களும் தற்கொலை முனைக்கு வந்து சில பல புகைப்படங்களை எடுத்துக் கொண்டு அங்கே இருந்த மற்றவர்களை கவனித்தோம். சில இளைஞர்கள் ஒரு குழுவாக வந்திருந்தார்கள். வந்திருந்தவர்களில் சிலர் நல்ல போதையில் இருந்தார்கள். தற்கொலை முனையில் சில இளம்பெண்களைப் பார்த்தவருக்கு, போதை இன்னும் தலைக்கேறியது! பாறைகளில் நின்றுகொண்டு ஒரு பிரசங்கம் செய்ய ஆரம்பித்தார்:

அதோ தெரிகிறதே ஒரு மலை முகடு…. அதில் நின்று கவிதை சொல்ல ஆசை……’ 
(கவிதை தான் எழுத தெரியலையே…. அப்புறம் எதுக்கு இந்த ஆசை! – கேட்டது உள்மனது!]

”ஏ பெண்களே… உங்களைப் போன்ற ஒரு பெண் என்னை ஏமாற்றிவிட்டாள். நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்” என்று ஏதேதோ பேச ஆரம்பித்தார். கேட்டுகொண்டிருந்த எங்களுக்கு அதிர்ச்சி. ’குதித்து விடுவானோ’ என அச்சத்தோடு சிலர் பார்க்க, ஒரு பெண், ‘குடிச்சுட்டு உளறுகிறான்…. இதுக்காகவே அந்த பெண் ஏமாற்றி இருக்கலாம்! சும்மா உதார் விடாது குதிடா பார்க்கலாம்!” என்று கொஞ்சம் மெல்லிய குரலில் சொன்னார்.

இது என்ன மரம்? நெய்வேலியில் இருந்து தில்லி வந்த பிறகு மரம் ஏறுவதில்லை…. இதில் முயற்சி செய்ய ஆசை…..

என்னது ’அப்புறம் என்ன ஆச்சு?, குதித்தானா இல்லையா?’ என்று தானே கேட்டீங்க! அதெல்லாம் குதிக்கலை. அந்தப் பெண் சொன்ன மாதிரி வெறும் உதார் விட்டதோடு சரி! கற்களின் மீது ஒரு குத்தாட்டம் போட்டுவிட்டு தனது கோமாளித்தனத்தினை மேலும் காட்சிப் படுத்திக் கொண்டிருந்தார்.

இங்கேயும் வீடு கட்ட ஆரம்பித்து விட்டோம்… ஒரு இஞ்ச் இடம் கூட விட மாட்டோம்லே!

நாங்கள் தற்கொலை முனைக்கு வந்து சில நிமிடங்கள் ஆகிவிடவே, எங்கள் ஓட்டுனர் மத்லூப் எங்களைத் தேடிக் கொண்டு அங்கே வந்துவிட்டார். ஒரு வேளை பணம் கொடுக்காது நாங்களும் காணாமல் போய்விடுவோம் என்று எண்ணியிருப்பாரோ? ”பயப்படாதே மத்லூப், நாங்கள் இங்கே விழப்போவதில்லை! கொஞ்சம் இயற்கையையும், மக்களின் செயற்கையான செயல்களையும் பார்த்துக் கொண்டிருந்தோம்” எனச் சொல்லி அங்கிருந்து நகர்ந்தோம்.

 

அடுத்ததாய் நாம் பார்க்கப் போகும் இடத்திற்கும் குதிரைக்கும் சம்பந்தம் உண்டு. அது என்ன சம்பந்தம்? அடுத்த பகுதியில் பார்க்கலாமா?

Share This Book

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *