7 பகுதி-7: நைனிதால் – கேள்விக்கென்ன பதில்?

சென்ற பகுதியில் சொன்ன கேள்விக்கு, எனது வலைப்பூவில் இத்தொடரை வெளியிட்ட போது வந்த கேள்விகள்/பதில்கள்:

பகவான் ஜி: குளிர் பாட்டில்கள் தாண்டினால் மரணக் குழியில்தான் விழ வேண்டியிருக்கும் இல்லையா ?

திருமதி கீதா சாம்பசிவம்: அந்தப் பக்கம் இருக்கிறவங்களுக்குக் குடிநீரை இப்படித் தொங்க விட்டு அனுப்பறாங்களா, இல்லை ஏதானும் வேண்டுதலா?

ஸ்ரீராம்: பாட்டில்கள் எங்கேயோ பயணம் செய்கின்றன போலும்!

திருமதி இராஜராஜேஸ்வரி: குளிர்பான கம்பெனியின் விளம்பரங்களா?

திருமதி சித்ரா சுந்தர்: hanging garden கேள்விப்பட்டிருக்கேன். ஆனால் இது புதுசா இருக்கே. ஒருவேளை Recycle concept ஆக இருக்குமோ. இல்லை ஏதோ மரத்திலிருந்து எண்ணெய் அல்லது திரவம் எடுத்து காயவைக்க வேண்டுமோ!

கேள்விக்கு பதில் கேள்வி கேட்ட/பதில் சொல்ல முயற்சித்த அனைவருக்கும் நன்றி. ஒரு கேள்வி எத்தனை பதில் கேள்விகளை, யோசனைகளை உருவாக்கி இருக்கிறது! சரி கேள்விக்கான பதிலுக்கு வருவோம்!

நாங்கள் தேநீர் குடித்த [kh]குர்பாதால் அருகிலேயே இன்னுமொரு மேடை. அதில் இன்னுமொரு கடை உண்டு. அந்த கடைக்கு உதவும் பொருட்டே இந்த குப்பிகள் கட்டி வைக்கப் பட்டு இருக்கின்றன. கடற்கரையிலும், பொருட்காட்சிகளிலும் காற்று நிரப்பிய பலூன்களை ஒரு பெரிய திரையிலோ/அட்டையிலோ வைத்து துப்பாக்கி மூலம் சுடுவதைப் பார்த்திருப்பீர்கள் தானே. அது போலவே இந்த நெகிழி குப்பிகளும் துப்பாக்கி மூலம் சுட்டு வீழ்த்தும் ஒரு விளையாட்டு. சுற்றுலா வந்திருக்கும் நபர்கள் துப்பாக்கி மூலம் குப்பிகளைச் சுட்டு விளையாடலாம். மூன்று குண்டுகள் சுட பத்து ரூபாய்! காற்றில் அசைந்து கொண்டிருக்கும் அந்த குப்பிகளை குறிபார்த்து சுடுவது கொஞ்சம் சிரமமான விஷயம் தான்!

தேநீர் அருந்திய பின் எங்கள் பயணம் தொடர்ந்தது. மீண்டும் மலைப்பாதையில் பயணித்த நாங்கள் மால் ரோடிற்கு திரும்பினோம். மால் ரோடில் இருக்கும் Aerial Ropeway. மல்லிதால் எனும் இடத்திலிருந்து Snow View Point வரை அமைக்கப்பட்டுள்ள Ropeway மூலம் பயணிக்க வேண்டும். எங்கள் ஓட்டுனர் மத்லூப் அந்த இடத்திற்கு அருகில் எங்களை இறக்கி விட்டு அவருக்கு பேசிய வாடகையை வாங்கிக் கொண்டு தனது தொடர்பு எண்ணைக் கொடுத்து விட்டு எப்போது வந்தாலும் அழைக்கும்படிச் சொல்லி அங்கிருந்து நகர்ந்தார்.

சாலையிலிருந்து இந்த Ropeway இருக்கும் இடத்திற்கு சாலையிலிருந்து மேல் நோக்கி கொஞ்சம் நடக்க வேண்டும். செல்லும் வழியெங்கும் சில கடைகள் இருக்க, அங்கே வந்து அவர்கள் விற்கும் பொருட்களை வாங்கிக் கொள்ள அவர்களிடமிருந்து அழைப்பு வந்தபடி இருக்க, Ropeway அலுவலகத்திற்குச் சென்றோம். சிலர் மேலே சென்று கொண்டிருக்கும் அந்த சிறிய பெட்டியைப் பார்த்துக் கொண்டிருக்க நானும் இன்னுமொரு நண்பரும் நுழைவுச்சீட்டு வாங்க வரிசையில் நின்று கொண்டிருந்தோம்.

அதற்குள் அந்த பெட்டியைப் பார்த்து விடுவோம்! மொத்தம் பதினோறு பேர் பயணிக்கும் வசதி உண்டு. அந்த பெட்டி தாங்கக்கூடிய அதிக பட்ச எடை 800 கிலோ மட்டுமே! மேலிருந்து மலைகளின் காட்சி மிகவும் அருமையானதாக இருக்கும் என்பதால் நிறைய குழந்தைகளும் பெரியவர்களும் அதில் செல்ல போட்டி போட்டுக் கொண்டு இருந்தார்கள். எங்கள் முறையும் வந்தது. பெரியவர்களுக்கு 100 ரூபாய் சிறுவர்களுக்கு 60 ரூபாய். நாங்கள் நான்கு நுழைவுச் சீட்டு கேட்க, ”உங்களுக்கு கொடுக்கப்படும் நேரம் மாலை 04.00 மணிக்கு தான். பரவாயில்லையா?” என்று கேட்டார்.

நாங்கள் அந்த இடத்தில் இருந்தபோது மணி இரண்டே கால்! கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டும். நண்பர்களுடன் பேசி, கூட்டிக் கழித்துப் பார்த்ததில் இங்கே காத்திருப்பதனால் மற்ற இடங்களைப் பார்ப்பது கடினம் ஆகி விடும் என அதில் பயணிப்பதை ஒதுக்கினோம். காலை 10 மணி முதல் மாலை ஐந்து மணி வரை வாரத்தின் ஏழு நாட்களும் செயல்படும் இந்த Ropeway-ல் பயணிப்பதும் ஒரு சுகமான அனுபவம் தான். நீங்கள் செல்வதாக இருந்தால் இதற்கான நேரத்தினை முன்னரே முடிவு செய்து பயணிப்பது நல்லது.

”போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோட” என்பது போல அங்கிருந்து புறப்பட்டு மால் ரோடினை அடைந்தோம். நைனா ஆற்றின் பக்கத்திலேயே ஒரு கோவில் எதிரே ஒரு மசூதி, நிறைய கடைகள் என ஆற்றங்கரையில் சில சுவாரசியங்கள் இருக்க அவற்றினைப் பார்த்துவிட்டு மதிய உணவு உட்கொள்ள வேண்டும். அடுத்த பதிவில் இந்த விஷயங்களைப் பார்க்கலாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *