8 பகுதி-8: நைனிதால் – நைனா தேவியும் ஜம்மா மசூதியும்

 கண்கள் இரண்டால்…  
சதியின் கண்கள் இரண்டால்….
உருவான நைனிதால்!

நைனி ஆற்றினை மூன்று ரிஷிகள் உருவாக்கியதாகவும் ஒரு கதை உண்டு. அத்ரி, புலஸ்த்யா மற்றும் புலஹா என்று மூன்று ரிஷிகள் இந்த வழியாக வந்து கொண்டிருக்கும் போது தண்ணீர் இங்கே இல்லாத காரணத்தினால் இங்கே பெரிய பள்ளம் தோண்டி அங்கே மானசரோவர் நதியின் தண்ணீரை நிரப்பினார்களாம். அதனால் இந்த நைனிதால் ஆறு தோன்றியது என்றும், இதற்கு மூன்று ரிஷி சரோவர் என்ற பெயரும் உண்டு எனச் சொல்கிறார்கள். கூடவே, மானசரோவர் நதியில் குளித்தால் என்ன புண்ணியம் கிடைக்குமோ அதே புண்ணியம் இந்த நைனி ஆற்றில் குளித்தாலும் கிடைக்கும் என்று சொல்கிறார்கள்!

ஓடம் நதியினிலே….. 
ஒருத்[தி]தன் மட்டும் கரையினிலே!
படகுத்துறை

போலவே இந்த நைனிதால் ஆற்றினை சக்தி பீடங்களில் ஒன்றாகவும் குறிப்பிடுகிறார்கள். சிவபெருமான் எரிந்து போன சதி[பார்வதி]யின் உடலை தூக்கிக் கொண்டு வரும்போது சதியின் கண்கள் இங்கே விழுந்தது எனவும் அதனால் தான் இந்த ஆறு நைனிதால் எனப் பெயர் பெற்றதாகவும் சொல்வதுண்டு. ஹிந்தியில் நயன் என்றால் கண்கள். தால் என்றால் ஆறு. நயனங்கள் இந்த தாலில் விழுந்ததால் நைனிதால்! இந்த ஆற்றின் வடகரையில் கோவில் கொண்டிருப்பவள் நைனா தேவி.

மிகப் பழமையான இந்தக் கோவிலில் சக்தியை கண்கள் ரூபத்தில் வழி படுகிறார்கள். நைனாதேவி கோவிலில் நைனா தேவியினைத் தவிர காளிக்கும் பிள்ளையாருக்கும் தனிச் சன்னதிகள் உண்டு. 1880-ஆம் ஆண்டு ஏற்பட்ட கோரமான மலைச்சரிவில் நைனா தேவி கோவில் முற்றிலும் அழிந்து விட மீண்டும் இக்கோவிலைக் கட்டி இருக்கிறார்கள்.

நாங்கள் கோவிலுக்குச் செல்லும் போது இருந்த மழைத்தூறல் மற்றும் முந்தைய இரவின் பனிப்பொழிவின் காரணமாக சாலை எங்கும் சேறும் சகதியும். அவற்றை மிதித்தபடியே கோவிலின் வாசலில் வந்து, எல்லோரும் தத்தமது காலணிகளை ஒழுங்கில்லாது ஆங்காங்கே போட்டு விட்டு சென்று இருந்தார்கள். கோவிலில் பலத்த கூட்டம் – சிலர் வெளியே நின்றபடியே இறைவியை தரிசிக்க, சிலர் உள்ளே கூட்டத்தோடு கூட்டமாக இடிபட்டு சென்று வந்தார்கள். கூட்டத்தோடு கூட்டமாக நானும் உள்ளே சென்று வெளியே வந்தேன்! பெரும்பாலான கோவில்களில் இப்போதெல்லாம் நின்று நிதானமாக தரிசனம் செய்ய முடிவதில்லை!

நைனிதால் ஆற்றின் அருகே இருக்கும் 
ஜம்மா மசூதி. எனக்கு வயது நூற்று முப்பத்தி இரண்டு!

கோவிலை விட்டு வெளியே வந்தால் ஒரு பெரிய மைதானம் – அதன் அப்புறத்தில் ஒரு மசூதி. இந்த மசூதியின் பெயர் ஜம்மா மஸ்ஜீத். இங்கிலாந்து ராணுவத்தில் இருந்த முஸ்லீம் வீரர்கள் தங்களது தொழுகையை நடத்த 1882-ஆம் வருடம் கட்டப்பட்டதாக வெளியில் வைத்திருக்கும் பதாகை தெரிவிக்கிறது. மசூதியையும் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டு வழியில் இருந்த சிறிய கடைகளை நோட்டம் விட்டோம்.

இயற்கை எழில் கொஞ்சும் மலையும்….  
எழிலின் சூழலில் இருக்கும் மசூதியும்.

பெரும்பாலான கடைகளில் குளிருக்கான உடைகள் நிரம்பி இருந்தது. காலுறைகள், வண்ண வண்ண குல்லாக்கள், கை உறைகள் என அனைத்துமே கம்பளி நூல்களில் செய்து விற்பனைக்கு வைத்திருந்தார்கள். சில திபெத்தியர்களின் கடைகளும் இருந்தது. குளிருக்கு இதமாக ஆங்காங்கே தேநீர் கடைகளும், ஆலு டிக்கி, குல்ச்சா-சோலே, பானிபூரி போன்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளையும் காண முடிந்தது. பெரும்பாலான உணவு விற்பனை கடைகளின் முன்னே மனிதர்களை விட ஈக்களின் கூட்டம் அதிகமிருந்தது!

கடைவீதி கலகலக்கும்…..

ஈக்கள் மொய்க்கும் உணவுப் பொருட்களைப் பார்த்த எங்கள் வயிற்றிலிருந்தும் ஏதோ ரீங்காரம் கேட்க ஆரம்பித்தது. காலையில், அதாவது பத்தரை மணிக்கு காலை உணவு சாப்பிட்டது. இத்தனை இடங்களில் சுற்றிய பிறகு, நடுவில் ஒரு தேநீர் குடித்தது தவிர, மூன்றரை மணி வரை ஒன்றும் சாப்பிடவில்லையே!   சரி என மால் ரோடினை நோக்கி நடந்தோம். கண்ணில் பட்ட ஒரு உணவகத்தினை நோக்கி கால்கள் பயணித்தன.

என்னை அணிந்து கொள்ளப் போகும் 
பிஞ்சுப் பாதங்கள் எதுவோ? – கடை வீதியில் விற்பனைக்கு வைத்திருந்த காலுறைகள்

மதிய உணவு என்ன இருக்கிறது என்று கேட்க, தவா ரொட்டியும், சப்ஜியும் எனச் சொன்னார். என்னென்ன சப்ஜி என்று கேட்க, ”தால் ஃப்ரை, தால் மக்கனி, சன்னா மசாலா, சோலே, மட்டர் பன்னீர், ஷாஹி பன்னீர், ராஜ்மா, பிண்டி மசாலா, மிக்ஸ் வெஜ் என வரிசையாக Centre Fruit விளம்பரத்தில் வருவது போல நாக்கினால் நாட்டியம் ஆடினார்.

வடக்கில் இரண்டு விதமான ரொட்டி உண்டு – ஒன்று தவா ரொட்டி, மற்றது தந்தூரி ரொட்டி. இங்கே தந்தூரி ரொட்டி இல்லை! தவா ரொட்டி மட்டுமே. தவா ரொட்டி கொஞ்சம் மெலிதாக இருக்கும், தந்தூரி ரொட்டி என்பதை சுடச் சுட மட்டுமே சாப்பிட முடியும். கொஞ்சம் நேரம் ஆனாலும், கயிறு இழுத்தல் போட்டி போல ரொட்டி இழுவை போட்டிதான்! தவா ரொட்டியும், தால் மக்கனி, மிக்ஸ் வெஜிடபிள் மற்றும் ஷாஹி பன்னீர் கொண்டு வரச் சொன்னோம். கூடவே சர்க்கரை தூவிய தயிர்! சலாட் – வெட்டிப் போட்ட, வெங்காயம், கீரா, முள்ளங்கி மற்றும் மேலே பிழிந்து கொள்ள எலுமிச்சைத் துண்டு – பெரும்பாலான வட இந்திய உணவகங்களில் இந்த சலாட் இலவசம்!

மதிய உணவினை உண்டதும், நண்பர் ஒருவர் கொஞ்சம் ஓய்வு எடுக்கலாமா என்று கேட்க, மற்றவர்கள் நேரம் இருக்காது, வேறு எங்கும் செல்லலாமே எனச் சொல்ல, மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் அவர் தோல்வி கண்டார்! எங்கள் ஓட்டுனர் பப்புவினை அலைபேசியில் அழைத்தோம். முதல் நாள் இரவு முழுவதும் வண்டி ஓட்டிய எங்கள் ஓட்டுனர் நல்ல ஓய்வு எடுத்துக் கொண்டது அவர் குரலிலே தெரிந்தது. அரை மணி நேரத்தில் வந்து சேர்ந்தார். அடுத்து நாங்கள் சென்ற இடம் எது? அடுத்த பகுதியில் பார்க்கலாம்!

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial 4.0 International License

ஏரிகள் நகரம் - நைனிதால் by வெங்கட் நாகராஜ் is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License, except where otherwise noted.

Share This Book

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *