9 பகுதி-9: நைனிதால் – பீம்தால்

ஓட்டுனர் பப்பு மால் ரோடின் கீழ்ப்பகுதியில் வந்து சேர நாங்கள் மால் ரோடில் நடமாடுபவர்களை பார்ப்பதை நிறுத்தி, அவரது வண்டியில் தஞ்சமடைந்தோம். மதிய உணவிற்குப் பிறகு எங்கள் பயணம் மீண்டும் தொடர்ந்தது. நாங்கள் முதலில் சென்றது நைனிதால் நகரிலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பீம்தால் எனும் இடத்திற்கு. பெயரில் “பீம்” இருக்கிறதே, இந்த இடத்திற்கும் மஹாபாரத பீமனுக்கு ஏதேனும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் உங்களுக்கு வந்திருந்தால், உங்கள் தோள்களை நீங்களே தட்டிக் கொள்ளுங்கள்! கொஞ்சம் மெதுவாக! பீமனைப் போலவே தட்டிக் கொண்டால் வலிக்குமே!

பீம் தால்….

பீம்தால் – கடல் மட்டத்திலிருந்து 1370 மீட்டர் உயரத்தில் இருக்கும் ஒரு சிறிய ஊர். ஊரின் முக்கியமான இடம் ஊரில் இருக்கும் பீம்தால் எனும் ஏரி. ஏரியின் நடுவே ஒரு சிறிய தீவு. அமைதியான சூழல் உங்களுக்கு மன அமைதியைத் தரவல்லது. பீம்தால் இருக்கும் இடத்தில் ஏரிக்கரையில் ஒரு சிறிய மேடை. அங்கே சில வாத்துகள் இருக்க, அவற்றை புகைப்படம் எடுத்தோம். நாங்கள் புகைப்படங்கள் எடுப்பதைப் பார்த்த சில வாத்துகள், சூரியன் பட கவுண்டமணி ”காந்தக் கண்ணழகி, இங்கே பூசு, தோ பார் இங்கே பூசு!” என்று சொல்வாரே அந்த மாதிரி நிறைய விதமாக போஸ் கொடுத்தன. ஒரு சில வாத்துகள் கால்களை கவ்விப் பிடிக்க வந்தன!

 

ஏரிக்கரையில் பீமேஸ்வர மஹாதேவ் கோவில் என்று ஒரு சிவன் கோவில் உண்டு. மஹாபாரத பீமன் தனது சகோதரர்களுடன் ஒரு வருட வன வாசத்தில் இருக்கும்போது இங்கே வந்ததாகவும், இங்கே இருந்த சிவன் கோவிலில் வழிபட்டதாகவும் நம்புகிறார்கள். சிறிய கோவில் தான். சிவபெருமானுக்கு ஒரு வணக்கத்தினைப் போட்டு அங்கிருந்து வெளியே வந்தோம்.

 

இந்த பீம்தாலிலும் சில தங்குமிடங்கள் உண்டு. அங்கேயிருந்து பக்கத்தில் இருக்கும் நளதமயந்தி தால் [நளன் இங்கே மூழ்கியதாக சொல்கிறார்கள்!], சாத்தால் [ஏழு ஏரிகள்], ஹிடிம்பா மலை [இந்த ஹிடிம்பனின் மகளான இடும்பியை பீமன் திருமணம் புரிந்து கொண்டதாகவும் கதை உண்டு], கார்கோடகன் மலை [கார்கோடன் என்பது ஒரு நாகம், நாக பஞ்சமி சமயத்தில் இங்கே மிகச் சிறப்பான விழா நடக்கும் என எங்கள் ஓட்டுனர் தெரிவித்தார்] போன்ற இடங்களைப் பார்க்கலாம். நேரப் பற்றாக்குறை காரணத்தினால் நாங்கள் இந்த இடங்களைப் பார்க்க வில்லை.

வாங்க…. ஒரு ரவுண்டு போலாம்!

எங்கள் ஓட்டுனர் ஹிமாச்சலப் பிரதேசத்தினைச் சேர்ந்தவராக இருந்தாலும், உத்திராகண்ட் பகுதிகளுக்கு பல முறை பயணம் செய்திருக்கிறாராம். என்ன அவரிடம் ஓரிரு தகவல்கள் வாங்குவதற்கு பெரிய பிரயத்தனங்கள் செய்ய வேண்டியிருக்கிறது! ஒவ்வொரு வார்த்தை பேசுவதற்கும் காசு கேட்பார் போல. இன்னும் ஒரு பிரச்சனையும் இருந்தது – எதாவது ஒரு இடத்தினைச் சொல்லி அங்கே போக வேண்டும் என்றால் – “அங்கே பார்ப்பதற்கு ஒன்றுமில்லை” என்று சொல்வார். இருக்கிறதா இல்லையா என்பதை நாம் பார்த்து தானே தெரிந்து கொள்ள வேண்டும்.

உணவு தேடும் வாத்து…..

பீம்தால் வரும்போதும் அப்படித்தான் ஒன்றும் இல்லை என்று சொன்னார். ஆனாலும் அந்த ஏரியும் ஏரியின் நடுவே இருக்கும் தீவும் கண்ணுக்கு மிகவும் குளிர்ச்சியான காட்சியாக இருந்தது.

 

இந்த ஏரியின் கரையில் சில படகுகளும் உண்டு. அரை மணி நேரம் சுற்றி வரலாம் என நினைத்தால் இப்போது ஓய்வு நேரம் என்கிறார் படித்துறை பாண்டி! ஒன்றிரண்டு பேர் படகில் சுற்றுகிறார்களே என்று கேட்டால் அவர்கள் தான் கடைசி. அதன் பிறகு மாலை ஐந்து மணிக்கு தான் படகோட்டம். நாங்கள் அங்கிருந்ததோ 03.45 மணிக்கு! சரி என படித்துறைப் பாண்டியிடம் கொஞ்சம் தர்க்கம் செய்துவிட்டு அடுத்த ஏரியில் படகுச் சவாரி செய்யலாம் என நகர்ந்தோம்.

 

பீம்தாலினை அடுத்து நாங்கள் பார்த்த இடம் என்ன? அந்த இடமும் ஒரு ஏரி தான். நைனிதால் என்றாலே ஏரிகள் நகரம் தானே… சுற்றிச்சுற்றி ஏரிகளும் மலைப்பகுதிகளும் எல்லா திசைகளிலும். நாங்கள் சென்ற இடம் பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *