13

முதல் நாள் இரவு போலவே இந்த இரவிலும் குளிர் அதிகம் தான் – இரண்டு டிகிரி செல்ஷியஸ் – ஆனால் பனிப்பொழிவு இல்லை. அதனால் ரஜாயினுள் [Woolen Quilt] புகுந்ததுமே உறக்கம் கண்களை அழுத்த அனைவரும் உறங்கினோம். அடுத்த நாள் காலை எழுந்ததும் முதல் நாள் பார்த்த இடங்களையும், இன்றைக்கு எந்த இடங்களைப் பார்க்கலாம் என்பதையும் பற்றி பேசினோம். இங்கேயும் இதுவரை என்னென்ன இடங்களைப் பார்த்தோம் என்பதை ஒரு முறை பார்க்கலாமா?

 

[GH]கோரா கால் மந்திர்

நைனிதால் ஏரி

நைனா தேவி கோவில்.

சைனா/நைனா பீக்

நோகுச்சியா தால்

பீம்தால்

தேநீர் தோட்டம்

[KH]குர்பா தால்

தற்கொலை முனை

 

இதைத் தவிர நாங்கள் பார்க்காது விட்ட இடங்கள் பற்றிய சிறிய குறிப்பு இங்கே.

 

பண்டிட் ஜி.பி. பந்த் மிருகக்காட்சி சாலை: நைனிதால் நகரின் மால் ரோடு பகுதியிலேயே இருக்கும் மிருகக்காட்சி சாலை – வெள்ளை மயில், சிறுத்தை, கரடி, குரைக்கும் மான், சாம்பார் வகை மான்கள், சைபீரியன் புலி, பல விதமான பறவைகள் போன்றவை இந்த மிருகக்காட்சி சாலையில் சிறைபடுத்தப் பட்டுள்ளன. குழந்தைகளுடன் சென்றால் தவற விடக்கூடாத இடம் இந்த மிருகக்காட்சி சாலை. நாங்கள் எல்லோருமே கொஞ்சம் வளர்ந்த சிறுவர்கள்[!] என்பதால் இங்கே செல்லவில்லை. இதற்கு நுழைவுக்கட்டணம் பத்து ரூபாய். இந்தியாவில் மிக உயரமான இடத்தில் இருக்கும் மிருகக்காட்சிசாலையாக இதைச் சொல்கிறார்கள்.

 

குகைப் பூங்கா: இந்த இடம் சமீபத்தில் உருவாக்கப்பட்ட ஒரு பூங்கா. சிறு குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான இடமாக இது இருக்கும் எனச் சொல்கிறார்கள். பல்வேறு விதமான மிருகங்களின் வசிப்பிடங்கள் [குகைகள்] எப்படி இருக்கும் என்பதை செயற்கையாக செய்து வைத்திருக்கிறார்கள். இந்த குகைகளுக்குள் செல்ல நுழைவுக் கட்டணம் வெறும் பத்து ரூபாய் மட்டுமே. நாங்கள் சென்ற போது மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக குகைகளுக்குள் தண்ணீர் இருந்தமையால் எங்களைச் செல்ல அனுமதிக்கவில்லை.

 

Aerial Ropeway: நைனிதால் நகரில் இருக்கும் மற்றொரு இடம் Aerial Ropeway. இந்த இடமும் குழந்தைகளுக்குப் பிடிக்கும். கூடவே பெரியவர்களுக்கும் Aerial Ropeway-ல் பயணிக்கும்போது கிடைக்கும் அருமையான காட்சிகளுக்காக இதில் பயணிப்பது நல்லது. நாங்கள் ஏன் பயணிக்கவில்லை என்பதை இத்தொடரின் ஏழாம் பகுதியான நைனிதால் – கேள்விக்கென்ன பதில் பகுதியில் பார்த்தோம்.

 

ஆளுனர் மாளிகை: இங்கிலாந்தில் உள்ள Buckingham Palace போலவே அமைக்கப்பட்டிருக்கும் இந்த மாளிகை ஆளுனர் மாளிகையாக தற்போது பயன்படுத்தப்படுகின்றது. ஆங்கிலேயர்கள் நமது நாட்டினை ஆண்டபோது இதை தங்களது ஓய்விடமாக அமைத்தார்கள். இதற்குள்ளே ஒரு நீச்சல் குளம், கோல்ஃப் மைதானம் என மிகச் சிறப்பாக இருக்கும். இந்த இடத்திற்கும் உள்ளே சென்று பார்க்க நுழைவுக்கட்டணம் உண்டு – மிக அதிகமில்லை 20 ரூபாய் தான்!

 

இந்த நான்கு இடங்களையும் பார்க்க இரண்டரை மணி நேரம் மட்டுமே ஆகும். அதற்கு பின்னர் பெரியதாக ஒன்றும் வேலை இருக்காது என்பதால், அருகில் உள்ள ஏதாவது இடத்திற்குச் செல்லலாம் என யோசித்து, அங்கே பக்கத்தில் இருக்கும் மற்ற இடங்கள் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள நினைத்தோம். நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் குர்தீப்-ல் Checkout time காலை பத்து மணி என்பதால் முதலில் அறையை காலி செய்வோம் என கீழே அலுவலகத்திற்குச் சென்று அங்கே பணம் கொடுத்துவிட்டு, பார்ப்பதற்கு பக்கத்தில் வேறு என்ன இடம் இருக்கிறது என விசாரித்தோம்.

 

அவர்கள் இரண்டு இடங்களைச் சொன்னார்கள் – ஒன்று ராணிகேத் எனப்படும் ஒரு மலைவாசஸ்தலம் – நைனிதால் நகரிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு இடம். இரண்டாவது ஜிம் கார்பெட் – நைனிதால் நகரிலிருந்து இரண்டரை மணி நேரப் பயணம் – 145 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இடம். இந்த இரண்டையும் கேட்டுக்கொண்டு, மால் ரோடில் இருக்கும் ஒரு உணவகத்தில் காலை உணவினை முடித்துக் கொண்டோம். பிறகு எங்கள் ஓட்டுனர் பப்புவும் வந்து சேர எங்கள் பயணத்தினைத் தொடர்ந்தோம்.

 

நாங்கள் இரண்டில் தேர்ந்தெடுத்தது – ராணிகேத் [அ] ஜிம் கார்பெட் – இரண்டில் எது என்று அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial 4.0 International License

ஏரிகள் நகரம் - நைனிதால் Copyright © 2015 by வெங்கட் நாகராஜ் is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License, except where otherwise noted.

Share This Book