14

சென்ற பகுதியில் கேட்டிருந்த கேள்விக்கு, வலைப்பதில் இத்தொடர் வந்தபோது ஒரு சிலர் ஜிம் கார்பெட் என்றும் ஒரு சிலர் ராணிகேத் என்றும் சொல்லி இருந்தார்கள். ஏற்கனவே நைனிதால் ஒரு மலைவாசஸ்தலம் என்பதால், இன்னுமோர் மலைவாசஸ்தலமான ராணிகேத் செல்வதற்கு பதில் ஜிம் கார்பெட் செல்லலாம் என நான்கு நண்பர்களும் ஒருமித்த முடிவு எடுக்க, காலை உணவான பராட்டா, தயிர், ஊறுகாய், முடித்து ஜிம் கார்பெட் நோக்கி எங்கள் பயணம் தொடங்கியது.

 

நைனிதால் நகரிலிருந்து கிளம்பியதும் மலைப்பாதையில் தொடர்ந்து பயணித்தோம். வழி முழுவதும் மலைப்பாதைக்கு உரிய பல விளம்பரங்கள் எழுதி வைக்கப்பட்டிருந்தன. ஒரு விளம்பரம் எங்கள் கவனத்தினை ரொம்பவே அதிகம் ஈர்த்தது. அது என்ன என்று தானே கேட்கிறீர்கள். “நீங்கள் வேகத்துடன் திருமணம் செய்து கொண்டிருந்தால் உடனே விவாகரத்து செய்து விடுங்கள்” என்பது தான் அந்த விளம்பரம் – தேவையான விளம்பரம் தான்! கரணம் தப்பினால் மரணம் என்பதை நாங்கள் வழியில் பார்த்த ”சரியா தால்” எனும் இடத்தில் புரிந்து கொண்டோம்.

 

”சரியா தால்” என்பது நைனிதால் நகரினைச் சுற்றி இருக்கும் பல ஏரிகளைப் போன்ற ஒன்று தான். ஹிந்தியில் ”சரியா” என்றால் இரும்புக் கம்பி – ஏனோ இந்த ஏரிக்கும் சரியா எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். ஆனாலும் அப்படி ஒன்றும் பெரிய ஏரி அல்ல. மிகச் சிறிய ஏரி தான் – தூரத்திலிருந்து பார்க்கும்போதே மிகச் சிறியதாய் தோன்ற அங்கு முன்னேறாமல் பக்கத்தில் இருக்கும் ஒரு நீர்வீழ்ச்சியினை நோக்கி நடந்தோம். உள்ளே செல்ல அனுமதிக் கட்டணம் நபர் ஒருவருக்கு ஐந்து ரூபாய் மட்டுமே.

 

Sadiatal Cascade என்று பெயர் எழுதியிருந்த நுழைவு வாயில் உங்களை அங்கே வரவேற்கிறது. ஆங்கிலத்தில் எழுதும்போது Sadiatal என்று எழுதியிருந்தாலும் இதைப் படிக்கும்போது சரியா தால் என்று தான் படிக்கவேண்டும். இப்படி சில தொல்லைகள் ஹிந்தியில் உண்டு – பஞ்சாபிகள் தங்களது பெயரைச் சொல்லும்போது ”விவேக் அரோடா” என்று சொல்வார்கள், ஆனால் ஆங்கிலத்தில் எழுதும்போது Vivek Arora என்று எழுதுவார்கள் – குழப்பம் தான் நமக்கு மிஞ்சும்!

இந்த சரியா தால் சிற்றருவியில், பெரியதாய் பார்க்க ஒன்றுமில்லை என்றாலும் தொடர்ந்து பயணிக்கும் போது கொஞ்சம் ஓய்வு எடுக்க இங்கே நிறுத்தலாம். குற்றாலத்தின் ஐந்தருவிகளைப் பார்த்தவர்களுக்கு இந்த அருவி அப்படி ஒன்றும் சிறப்பாகவோ, மனதுக்கு மகிழ்ச்சியைத் தருவதாகவோ இருக்காது. ஆனாலும், பல சுற்றுலாப் பயணிகளை இங்கே பார்க்க முடிந்தது. நானும் நண்பர்களும் நீர்வீழ்ச்சியை நோக்கி மலைப்பாதையில் நடக்க, பல இளம் ஜோடிகளைப் பார்க்க முடிந்தது.

 

அதில் ஒரு பெண் ரொம்பவும் தைரியமாக பாறைகள் மேல் நடந்து நீர்வீழ்ச்சியின் அருகே சென்று, தனது துணையாக வந்தவரை புகைப்படம் எடுக்கச் சொல்ல, அவரோ ரொம்பவே அலறிக்கொண்டு இருந்தார் – “அங்கே போகாதே, வழுக்கி விழுந்துடுவே, நான் வரலை…” என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். சிரித்தபடி நாங்கள் முன்னேற, அப்பெண் அந்த ஆணின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தார்!

 

நீர்விழ்ச்சியிலிருந்து வந்த சிலுசிலுப்பும் மரங்களிலிருந்து வந்த காற்றும் ரம்யமாக இருக்க, பாறைகளின் மேல் அமர்ந்து கொண்டு கீழே ஓடும் தண்ணீரை பார்த்துக் கொண்டு, அங்கே ஒரு சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டு கீழே இறங்க ஆயத்தமானோம். பாறைகளில் அமர்ந்திருந்தபோது மலைகளில் இருந்த மரங்களுக்கிடையே எதோ சிக்கிக் கொண்டிருப்பது போல தோன்றவே சற்று அருகே சென்று பார்க்க முடிவு செய்தோம்.

மலையில் இருக்கும் ஒற்றையடிப் பாதை வழியே சென்றால் சில மரக் கிளைகளில் ஒரு பேருந்து மாட்டிக் கொண்டிருந்தது. மலைப்பாதை வழியே வரும்போது அந்த பேருந்தினை ஓட்டிய ஓட்டுனர் வேகத்தினை விவாகரத்து செய்யாத காரணத்தால், அவர் மட்டுமன்றி அப்பேருந்தில் பயணம் செய்த பலருக்கும் முடிவினைத் தேடித் தந்திருப்பார் போல! பேருந்து விழுந்து பல நாட்கள்/மாதங்கள் ஆனாலும் அந்தப் பேருந்தினை மரக்கிளைகளிலிருந்து மீட்டெடுத்து எந்த பயனும் இல்லை என்பதாலோ என்னமோ அப்படியே தொங்கிக் கொண்டிருக்கட்டும் என விட்டுவிட்டார்கள் போல!

 

சில மணித்துளிகள் அங்கே இயற்கையை ரசித்து விட்டு, மீண்டும் சாலைக்கு வந்தோம். சாலை ஓரத்தில் இருக்கும் ஒரு சிறிய கடையில், எங்கள் ஓட்டுனர் பப்பு தேநீர் குடித்துக் கொண்டிருக்க, நாங்களும் ஒரு தேநீரை குடித்து, ஜிம் கார்பெட் நோக்கிய எங்கள் பயணத்தினைத் தொடர்ந்தோம். ஜிம் கார்பெட் செல்லும் வழியில் வந்த ஒரு ஊரின் பெயர் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது – காலாடுங்கீ!

மலைப்பாதையில் பார்த்த விளம்பரம், தொங்கிக் கொண்டிருக்கும் பேருந்து ஆகிய இரண்டுமே முழுப் பயணத்திலும் எங்கள் நினைவில் மீண்டும் மீண்டும் வந்து சென்றது என்பது உண்மை. காரணம் எங்கள் ஓட்டுனர் பப்பு வேகத்தினை திருமணம் புரிந்து கொண்டிருந்தார் – அதுவும் காதல் கொண்டு மணம் புரிந்தவர் போல நடந்து கொண்டிருந்தார்!

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial 4.0 International License

ஏரிகள் நகரம் - நைனிதால் Copyright © 2015 by வெங்கட் நாகராஜ் is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License, except where otherwise noted.

Share This Book