19

ஏரிக்கரை பூங்காற்றே…. 
நீ போற வழி தென்கிழக்கோ….

கூழாங்கற்கள் நிரம்பிய சிற்றோடை போல ஓடிக்கொண்டிருக்கும் கோசி ஆற்றின் கரையில் சில நிமிடங்கள் அமர்ந்து இளைப்பாறினோம். போகும்போது வாங்கிச் சென்ற சில நொறுக்குத் தீனிகளை நாங்கள் உண்டு மகிழ்ந்தோம். கூடவே ஓட்டுனர் வீரப்பனுக்கும் கொடுத்தோம். காலியான அந்த பைகளை காட்டில் போடக்கூடாது என்ற சுய கட்டுப்பாட்டுடன் எடுத்து வைத்துக் கொண்டோம் – வெளியே சென்ற பிறகு குப்பைக்கூடையில் போடலாம் என!

நீலவானத்திலிருந்து வேண்டிய அளவு நீல வண்ணத்தினை எடுத்துக் கொண்டாள் போலும் இந்த ஓடைப்பெண்!

நாங்கள் அங்கே அமர்ந்திருந்தபோது ஒரு சில தனியார் வாகனங்களும் அந்த இடத்தினைக் கடந்தன. புதிதாய் மணமான ஒரு ஜோடி, இன்னும் சில இளைஞர்கள் இருந்த ஒரு வாகனம் வந்தது. வாகனத்தில் இருந்த அனைவரும் பலத்த சப்தங்களை எழுப்பியபடி வந்தனர். வந்தவர்களுக்கு வால்கள் இருந்ததாகத் தெரியவில்லை – ஆனாலும் வானரங்களைப் போல நடந்து கொண்டார்கள். இருக்கைகளில் அமர்ந்து கொள்ளாது கதவுகளில் இருக்கும் கண்ணாடிகளை கீழிறக்கி அதன் மேல் பக்கத்திற்கு ஒன்றாய் ஆண்கள் அமர்ந்து கொள்ள ஓட்டுனர் இருக்கைக்கு எதிர் கதவின் மேல் இரண்டு பெண்கள் – வாகனத்தின் மேல் ஒரு இளைஞர் – அவர் கீழே விழுந்துவிடாதபடி பின் பக்கம் இருந்த இளைஞர்கள் பிடித்துக் கொண்டிருந்தார்கள். காட்டிற்குள் இருந்த குரங்குகள் கூட இவர்களின் சேஷ்டைகளைப் பார்த்து வெட்கம் கொண்டு ஓடின!

”புல்வெளியோ என்ற சந்தேகம் வேண்டாம்….” என்று சொல்லாமல் சொல்லும் பாசி படிந்த கிண்று….

சில நிமிடங்கள் கடந்தபிறகு அந்த சிற்றோடையின் குறுக்கே இருந்த கற்களாலான பாதையை ஜீப்பில் அமர்ந்து கடந்தோம். ஜீப் என்பதால் சுலபமாக கடக்க முடிந்தது. கார் போன்றவற்றில் வந்தவர்கள் அந்த இடத்தினைக் கடக்க ரொம்பவே கஷ்டப்பட்டார்கள். வெள்ளம் இருந்தால் நிச்சயம் அப்படிக் கடக்கும்போது வண்டி அடித்துக் கொண்டு போய்விடும் அபாயம் இருந்தது.

சீதாவனி காட்டிற்குள் இருக்கும் தங்கும் விடுதி….
தனிமை விரும்பிகள் இங்கே தங்கலாம்…  பகலில் சில சுற்றுலாப் பயணிகள் தொந்தரவு செய்தாலும் இரவில் தனிமை…. அவ்வப்போது சில காட்டு நரிகளின் ஊளையிடும் சத்தம் உங்கள் தனிமையைக் கெடுக்கலாம்!

தொடர்ந்து காட்டின் ஊடே பயணித்து ஆங்காங்கே ஒலிக்கும் பறவைகளின் ஒலிகளையும், மரங்கள் அசைந்து ஒன்றுக்கு ஒன்று உரசிக்கொள்ளும் ஓசைகளும் ரம்மியமாக இருந்தன. சில நிமிடங்கள் கடந்த பிறகு நாங்கள் சென்றடைந்த இடம் ஒரு கோவில்….. என்னது காட்டிற்குள்ளும் கோவிலா? என்று ஆச்சரியம் உங்களுக்கு வரலாம். எங்களுக்கும் தான். ஜிம் கார்பெட் வனத்தின் இந்தப் பகுதியின் பெயரிலே இதற்கான காரணம் ஒளிந்திருக்கிறது. இந்த பகுதியின் பெயர் – சீதாவனி. அதாவது சீதை இருக்கும் வனம்.

காளி…..  
நரியின் சத்தம் உங்களைப் பயமுறுத்தினால் இவளை நினைத்துக் கொள்ளலாம்….

இராவண வதம் முடிந்து சீதையும் இராமரும் அயோத்யா திரும்புகிறார்கள். அயோத்யா வந்த பிறகு அயோத்யா மக்கள் சீதையின் மீது சந்தேகம் கொள்ள சீதையை காட்டுக்கு அனுப்பினார் என்று படித்திருக்கிறோம். இது உண்மையா, இப்படி காட்டுக்குள் தனது மனைவியை அனுப்பியது சரியா என்ற விவாதத்திற்குள் சென்றால் இந்த பதிவின் நீளம் உங்களை இங்கிருந்து ஓடச் செய்யலாம்! அதனால் அதைப் பற்றி பார்க்காது, இந்த இடம் பற்றி பார்க்கலாம். அப்படி காட்டுக்குள் அனுப்பப்பட்ட சீதை இந்த காட்டிற்குள் இருந்ததாக இந்தப் பகுதி மக்கள் நம்புகிறார்கள்.

சீதாவனி….  
பெயர் கொடுத்த சீதை….  
கூடவே லவனும் குசனும்…

இந்த காட்டுக்குள் சீதா மாதாவிற்கு ஒரு கோவிலும் கட்டியிருக்கிறார்கள். சீதையின் கூடவே லவகுசர்களும் அமர்ந்திருக்கிறார்கள். கோவிலுக்குச் செல்லும் பாதையில் இருந்த தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகத்தின் தகவல் பலகையும் “Temple Sacred to Sita” என்று தகவல் சொல்கிறது. வாருங்கள் சீதை மற்றும் லவகுசர்களை தரிசிப்போம். கூடவே ஒரு பிள்ளையார் சிலையும் காளி சிலையும் உண்டு. மேலிருந்து பார்க்கும்போது ஒரு கிணறு பச்சைப் பசேலென பாசியுடன் காட்சியளித்தது! அதனைத் தாண்டி பார்வையை ஓட்டினால் தண்ணீர் சலசலவென ஓடிக்கொண்டிருந்தது.

சீதாமாதாவிற்கான கோவில்…… கொஞ்சம் பழமை தெரிகிறதோ?

இந்த இடத்தில் ஒரு தங்கும் விடுதியும் உண்டு. தங்குபவர்கள் தங்களுக்குத் தேவையான உணவினை எடுத்துக் கொண்டு வருவது நல்லது. இங்கே சமைக்கும் வசதிகள் இருந்தாலும் தேவையான பொருட்களை ராம்நகரிலிருந்து தான் வாங்கிக் கொண்டு வரவேண்டும். இந்த இடத்தின் சுற்றுவட்டாரத்தில் சில கிராமங்கள் இருக்கின்றன. அவற்றிலிருந்து வரும் ஒன்றிரண்டு பேர் இங்கே தேநீர் கடை வைத்திருக்கிறார்கள். சுற்றுலாப் பயணிகள் இங்கே தேநீர் அருந்தி சீதா தேவியை தரிசித்து திரும்புகிறார்கள். நாங்களும் சில நிமிடங்கள் அந்த இயற்கை எழிலை ரசித்து, சுத்தமான காற்றை சுவாசித்து மீண்டும் ராம் நகரை நோக்கி பயணிக்க ஆயத்தமானோம்.

 

அடுத்தது என்ன? அடுத்த பகுதியில் பார்க்கலாம்!

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial 4.0 International License

ஏரிகள் நகரம் - நைனிதால் Copyright © 2015 by வெங்கட் நாகராஜ் is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License, except where otherwise noted.

Share This Book