3

நித்ரா தேவியின் தாலாட்டில் உறங்கிய எங்களை அவள் விடவே இல்லை. தழுவியபடியே இருக்க, நான் அவள் பிடியிலிருந்து விடுபட்டபோது மணி காலை 09.00. அப்போதும் மற்ற நண்பர்களை அவள் பிடித்திருக்க, காலைக்கடன்களை முடித்து, அறையிலிருந்து வெளியே வந்தேன். வந்து பார்த்தபோது எதிரே முழுவதும் பனிபடர்ந்த மலை – மலையினை ஒரு பனிப்போர்வை போட்டு மூடி வைத்த மாதிரி இருந்தது. நாங்கள் இருந்தது தங்குமிடத்தின் இரண்டாம் தளத்தில். கண்களை கீழே சாலை நோக்கி செலுத்தியபோது நின்றுகொண்டிருந்த அத்தனை வாகனங்களிலும் பனி படர்ந்திருந்தது.

 

பொதுவாகவே பனிப்பொழிவு இரவு நேரங்களில் தான் அதிகம் இருக்கும் என்று சொல்கிறார் நாங்கள் தங்குமிடத்தில் பணிபுரியும் ஒரு நேபாளி. காரணமாக அவர் சொன்னது அறிவியல் ரீதியாக உண்மையோ பொய்யோ, மிகவும் ரசனையோடு சொன்னார். பனிப்பொழிவினை இரண்டு விதமாக பிரித்துவிடுகிறார் இவர் – ”ஒன்று பனிக்கட்டி மழை மற்றொன்று பஞ்சு போன்ற பனி மழை – அதிலும் பஞ்சு போன்ற பனிக்கு வெட்கம் அதிகம் அதனால் யாரும் பார்க்காத இரவு வேளையில் தான் பஞ்சு போன்ற பனி அதிகம் பொழியும்” என்று சிலாகித்தார்.

 பனியைத் தாங்கும் இலைகள்! எங்களுக்கும் பலம் உண்டு என்று சொல்கிறதோ?

சில பல படங்களை எடுத்து விட்டு, எல்லோருமாக தயாராகி வெளியே வந்தோம். சாலை எங்கும் மனிதர்கள் தங்களை தலை முதல் கால் வரை சூடு தரும் உடைகளால் மூடி இருந்தார்கள் – திறந்திருந்தது முகம் மட்டுமே! முகத்தில் கூட சிலருக்கு குளிரின் காரணமாக நடுக்கம் தெரிந்தது – பற்கள் கிடுகிடுத்ததால்! தலைக்கு குல்லா, கைகளுக்கு கையுறைகள், மேலே ஜாக்கெட், மஃப்ளர் என இருக்கும் அனைவரையும் பார்த்த என்னுடன் வந்த ஒரு நண்பர் கொஞ்சம் கிண்டல் செய்து, “அப்படி ஒன்றும் குளிரவில்லையே! ஏன் இவ்வளவு PACKING?” என்றார். சிறிது நேரம் கழித்து அவர் கேட்டது – ‘வெங்கட் ஜி! குல்லா மற்றும் கையுறைகள் வாங்கணும்…. உள்ளங்கையெல்லாம் உறைந்துவிட்டது!”

எனக்கு அத்தனை பலமில்லை – என் இலைகள் உதிர்ந்து விட்டன! ஆனாலும் வீடில்லாது தவிக்கும் இரு பறவைகளுக்கு நான் அடைக்கலம் தந்தேன்! அதுவும் ஒருவிதத்தில் பலம் தான்!

நேரே நாங்கள் சென்றது உணவகம் நோக்கி. மால் ரோடு முழுவதும் தங்குமிடங்களும் உணவகங்களும் தான். பெரும்பாலான வட இந்திய உணவகங்களில் காலை நேரத்தில் பராட்டா தான் கிடைக்கும் – ஆலு பராட்டா முக்கியம்!

 

ஆளுக்கு இரண்டு ஆலு பரோட்டா சாப்பிட்டாலே வயிறு நிரம்பிய உணர்வு வந்துவிடும்! ஆலு பரோட்டா – தொட்டுக்கொள்ள ஊறுகாய், தயிர், பச்சைமிளகாய் என மிகச் சாதரணமான ஒரு உணவு! ஆலு பராட்டா எப்படி செய்வது என எதாவது சந்தேகம் வந்துவிட்டால் அதற்கும் இங்கே விளக்கம் இருக்கிறது! பாருங்க! [ஒரு சின்ன விளம்பரம் தான்! :)] வயிறு நிறைந்ததும், அடுத்ததாய் எதற்கு வந்தோமோ அந்த வேலையை ஆரம்பிக்க வேண்டும்! உணவகத்திலிருந்து வெளியே வரும் சுற்றுலா பயணிகளை அப்படியே இனிப்பினில் படரும் ஈக்கள் போல சிலர் முற்றுகை இடுகிறார்கள்.

”என்னதான் நீங்கள் கூரை போட்டிருந்தாலும் அதற்கு அழகு சேர்த்திருப்பது நான் தான்” என்று சொல்லாமல் சொல்கிறதோ பனி!

அந்த ஊரில் இருக்கும் முக்கியமான சுற்றுலா தளங்களை சுற்றிக் காண்பிக்கும் வாகன ஓட்டிகள் தான் அவர்கள். தில்லியிலிருந்தே வாகனம் எடுத்து வந்தாலும், உள்ளூரில் இருக்கும் வாகன ஓட்டியாக இருந்தால் பல இடங்களை சுலபமாக பார்க்க முடியுமே என ஒரு வாகன ஓட்டியிடம் பேசினோம். அவர் பெயர் மத்லூப் [Mathloob] – சுறுசுறுப்பான இளைஞர். வெளியூர் என்றாலே அவர்களிடமிருந்து விரைவில் பணம் சம்பாதிக்க நினைப்பார்கள். இவரிடம் கொஞ்சம் பேசியதில் அதிக ஆசைப் படாதவராக இருக்க, அவரிடம் பேசி அவர் வாகனத்தில் செல்ல முடிவு செய்தோம்!

 

நான்கு மணி நேரம் சுற்றிக் காண்பிக்க 500 ரூபாய் என பேசிக்கொண்டு அவரது 4+1 இருக்கைகள் கொண்ட சிற்றுந்தை அமர்த்திக்கொண்டோம். நேராகச் சென்றது ஒரு சமவெளிப் பகுதிக்கு. கொஞ்சம் மலைப்பாங்கான பாதையில் நடந்து சென்றால் நம் கண்ணெதிரே பனிப்போர்வை விரித்து வைத்திருந்தது! அங்கே குழந்தைகளும் பெரியவர்களும் பனிக்கட்டிகளை ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடினார்கள்.

 

சில குழந்தைகள் பனிக்கரடி செய்ய, மற்றவர்கள் ஏற்கனவே யாரோ செய்து வைத்த பனிக்கரடியுடன் விதவிதமாய் படங்கள் எடுத்துக் கொண்டார்கள். சிலர் அப்படியே பனிக்கரடியை கடித்துத் தின்பது போல படங்களை எடுத்துக் கொண்டார்கள்! நானும் நண்பர் பிரமோதும் சுற்றிச் சுற்றி படங்கள் எடுக்க, எங்களை அழைத்து வந்த மத்லூப் எங்களிடம் காமெராவினை வாங்கி, எங்கள் அனைவரையும் சேர்த்து சில புகைப்படங்கள் எடுத்தார்!

”இன்றைக்கு யாரை நான் சுமப்பேனோ?” – தெரிந்து கொள்ள காத்திருக்கும் குதிரை.

அங்கேயே இருந்துவிடலாம் எனத் தோன்றினாலும் இன்னும் பார்க்க வேண்டிய இடங்கள் இருந்ததால் மீண்டும் மலைப்பாதை வழியே இறங்கி சாலைக்கு வந்தோம். அடுத்த இடத்தினை நோக்கி பயணிக்கும்போது சாலை முழுவதும் பனி இருந்ததால் பல இடங்களில் தடை ஏற்பட்டது. பனியைப் பார்த்ததால் பலர் தங்களது வாகனங்களை அந்த குறுகிய சாலையில் நிறுத்தி விளையாட ஆரம்பித்திருக்க, எதிரும் புதிருமாய் வாகனங்கள் நிற்க ஆரம்பித்தன! – மிகக் குறுகிய சாலை ஆனால் அதுவும் தில்லி நோக்கிச் செல்லும் ஒரு சாலை. அதனால் அங்கே போக்குவரத்து ஸ்தம்பிக்க, நாங்களும் கொஞ்சம் இறங்கி நடந்தோம்.

 சாலை முழுவதும் பனி….  தடுமாறும் வாகனம்.

அரை மணி நேரத்தில் போக்குவரத்து கொஞ்சம் சீராக, நாங்கள் மீண்டும் பயணித்து ஒரு இடத்திற்கு வந்து சேர்ந்தோம். அந்த இடம் Goda Point! ஹிந்தியில் goda என்றால் குதிரை. அந்த இடத்தில் நிறைய குதிரைகள் நின்று கொண்டிருக்கும். அவர்கள் வைத்திருக்கும் குதிரைகள் மீது பயணித்தோ, அல்லது மலைப்பாதையில் நடந்து சென்றோ ஒரு அழகான இடத்தினைப் பார்க்க முடியும். அது எந்த இடம் என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்!

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial 4.0 International License

ஏரிகள் நகரம் - நைனிதால் Copyright © 2015 by வெங்கட் நாகராஜ் is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License, except where otherwise noted.

Share This Book