4

நண்பர்களே, உங்களுக்கு குதிரை சவாரி செய்வதில் ஏதும் பயமுண்டா? இல்லையெனில் கரடுமுரடான மலைப்பாதையில் நடந்து பழக்கமுண்டா? குதிரை சவாரி செய்ய பயமிருந்தால் நடப்பதைத் தவிர வேறு வழியில்லை. இன்று நாம் பார்க்கப் போகும் இடத்திற்கு ஒரு மலைப்பாதையில் ஆறு கிலோமீட்டர் தொலைவு பயணிக்க வேண்டும். நடந்து சென்றால் ஒன்றரை-இரண்டு மணி நேரத்தில் அந்த இடத்தினை அடைந்து விடலாம். குதிரை சவாரி எனில் ஒரு மணி நேரம் போதுமானது.

இடம் என்ன என்று சொல்லவே இல்லையே என கோபம் கொள்ள வேண்டாம்! அந்த இடத்தின் பெயர் நைனா பீக் [NAINA PEAK]! இந்த இடத்தினை முன்பெல்லாம் சைனா பீக் [அ] சீனா பீக் என்று தான் அழைத்து வந்தார்கள். சில வருடங்களாகத் தான் இந்த இடத்தின் பெயரை நைனா பீக் என்று மாற்றி இருக்கிறார்கள். கடல்மட்டத்திலிருந்து சுமார் 2615 மீட்டர் அதாவது 8580 அடி உயரத்தில் இருக்கிறது இந்த நைனா பீக்.

 

நைனிதால் நகரிலிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த இடத்திற்கு நடந்து செல்வது அடிக்கடி மலையேற்றம் செய்யும் நபர்களுக்கே சவாலாக இருக்கும். ஆனாலும் அங்கே சென்றுவிட்டால் நீங்கள் பார்க்கபோவது உங்களை அப்படியே அசத்திவிடும் படி இருக்கும். பட்ட கஷ்டம் என்றும் பலன் தரும் என்பது இந்த மலையேற்றத்தின் முடிவிலும் உங்களால் உணர முடியும்.

 

வழியில் இருக்கும் மலைகளில் அத்தனை மரங்கள், இயற்கைக் காட்சிகள் என மிக அழகாய் இருக்கும். அவற்றைப் பார்த்துக் கொண்டே வந்தால் நீங்கள் மூச்சு வாங்கி மேலே நடந்து செல்வது உங்களுக்குத் தெரியாமல் போகலாம்! வாங்க உங்களுக்கும் மூச்சு வாங்குவது தெரிகிறது….. அட இதோ வந்துட்டீங்க! பார்க்கவே கண்கொள்ளாக் காட்சி உங்கள் கண்முன்னே! அங்கே பாருங்க இமயமலை பனியை போர்வையாக்கி மூடிக்கொண்டு உங்களுக்கு காட்சி தருது!

 

ஆங்கிலத்தில் Bird’s Eye View என்று சொல்வது போல இந்த இடத்திலிருந்து நைனிதால் நகரை நீங்கள் பார்க்க முடியும். கூடவே சுற்றிப் பார்த்தால் வெறும் மலை…. மலை… எங்கெங்கு காணினும் மலையடா! என்று நீங்கள் பாட முடியும்…. ஆனால் வாயைத் திறந்தால் கையில் சிகரெட் இல்லாமலே புகைக்க ஆரம்பித்து விடுவீர்கள்!

 

நாங்கள் சென்ற அன்று இரவில் பனிப்பொழிவு அதிகம் இருந்தமையால் ஒரு உயரத்திற்குப் பிறகு எங்களால் நடக்க முடியவில்லை. அங்கேயே இருந்துவிடலாம் எனத் தோன்றினாலும், நைனிதால் நகரில் நாங்கள் அமர்த்திக்கொண்ட வாகன ஓட்டி மத்லூப் அதிக நேரம் காத்திருக்க முடியாது என்பதாலும் கீழே விரைந்து வந்தோம்.

 

அதே போல மலை உச்சியில் இருக்கும் இன்னுமொரு இடம் “Tiffin Top”! யாரோ வேலை இல்லாதவர் அந்த மலை உச்சியில் தன்னுடைய டிஃபன் பாக்ஸை திறந்து சாப்பிட்டார் என நினைத்துவிட வாய்ப்புண்டு! இந்த இடத்திற்கு Dorothy’s Seat என்ற பெயரும் உண்டு. நம்மை பல ஆண்டுகள் ஆண்ட ஆங்கிலேயர்களில் ஒருவர் தனது ஆசை மனைவி Dorothy Kellet என்பவருக்கு கட்டிய நினைவிடம் தான் இந்த Tiffin Top எனும் Dorothy’s Seat. இந்த இடத்திற்கும் நடந்தோ அல்லது குதிரை சவாரி செய்தோ செல்ல முடியும். நடந்து செல்வதென்றால் நல்ல காலணிகளை அணிந்து கொண்டு, குளிருக்குத் தகுந்த உடையும் அணிந்து செல்வது நல்லது.

எங்கே செல்லும் இந்தப் பாதை……

இந்தப் பயணத்தில் நாங்கள் நைனா பீக் மட்டும் தான் சென்றோம். மேலே சொன்ன மற்ற இடமான Tiffin Top செல்ல வேண்டாமென முடிவு செய்து விட்டோம். இங்கே ஒரு விஷயத்தினைச் சொல்ல வேண்டும். குதிரை சவாரி செய்வது என்றால், குதிரைக்காரரிடம் முன்னரே பேசிக் கொள்வது நல்லது. ஆறு கிலோ மீட்டர் தொலைவு செல்லவே 1000 ரூபாய் வரை கேட்கிறார்கள் – அதுவும் உங்களுக்கு ஹிந்தி தெரியவில்லை எனில் 1500 ரூபாய் கூட கேட்பார்கள்.

 

நைனா பீக் வரை சென்று மீண்டும் திரும்ப [G]கோடா பாயிண்ட் வரை வருவதற்கு எத்தனை என்பதை முன்னரே அவர்களோடு பேசி முடிவு செய்து குதிரையில் பயணிப்பது நல்லது.

 

மலையேற்றம் [அ] குதிரை சவாரி என நீங்களும் சென்றிருப்பதால் சற்றே ஓய்வு எடுத்துக் கொண்டால் நன்றாக இருக்கும் எனத் தோன்றுகிறது அல்லவா? சற்றே ஓய்வெடுத்துக் கொள்வோம்…. அடுத்த பகுதியில் உங்களை அழைத்துச் செல்லப் போவது ஒரு ஆபத்தான இடத்திற்கு….. அதற்கென்று பயந்து கொண்டு வராமல் இருந்து விடாதீர்கள். உங்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல நான் பொறுப்பு!

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial 4.0 International License

ஏரிகள் நகரம் - நைனிதால் Copyright © 2015 by வெங்கட் நாகராஜ் is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License, except where otherwise noted.

Share This Book