1

உத்திராகண்ட் மாநிலத்தில் இருக்கின்ற ஒரு மலைவாசஸ்தலம் நைனிதால். புது தில்லியிலிருந்து சாலை வழிச் சென்றால் சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஏரிகளின் நகரத்தினை அடைய நீங்கள் [G]காசியாபாத், ஹாபூர், மொராதாபாத், ஹல்த்வானி வழியாகச் சென்றால் சுமார் ஏழு மணி நேரம் ஆகலாம். மொராதாபாத் வரை சாலை நன்றாக இருக்கும். அதன் பிறகு ராம்பூர் வரை குண்டுகுழியாக இருக்கும் சாலை தான் – பிரசவத்திற்கு இலவசம் என்று ஆட்டோவில் எழுதி இருப்பதை இந்தச் சாலையில் தைரியமாக எழுதி வைக்கலாம்.

அப்படி சாலையில் செல்வது உங்களுக்குப் பிடிக்காது எனில், ஆகாய மார்க்கமாகவும் செல்லலாம். ஆனால் நைனிதால் நகரில் விமான நிலையம் இல்லை. அருகிலுள்ள விமான நிலையம் பந்த்நகர் எனும் இடத்தில் இருக்கிறது. நைனிதால் நகரிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. ஆனால் தில்லியிலிருந்து பந்த்நகர் செல்லும் விமானங்கள் அதிகம் இல்லை.

அப்படி இல்லையெனில், ரயிலிலும் செல்ல முடியும். நைனிதால் நகரத்தில் ரயில் நிலையம் ஏதுமில்லை. பக்கத்திலிருக்கும் ரயில் நிலையம் காத்கோதாம் [KATHGODAM] – தில்லி நகரிலிருந்து இரண்டு ரயில்கள் காத்கோதாம் வரை செல்லும் – சுமார் ஏழு மணி நேரப் பயணம்.  காத்கோதாம் நகரிலிருந்து நைனிதால் சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவு. அதை சாலை வழியாகத்தான் கடக்க வேண்டும்.

நாங்கள் தேர்ந்தெடுத்தது சாலைப் பயணம் தான் – எனக்குப் பிடித்ததும் அதுதான். எட்டு மணி நேரத்திற்கும் குறைவான பயணம் எனில் நிச்சயம் சாலை வழிப் பயணம் தான். கேரள நண்பர் ஜனவரி மாதத்தில் வரப் போவதாக தகவல் வந்ததும் எங்காவது செல்ல முடிவு செய்தோம். கூடவே இன்னும் சில தில்லி நண்பர்களும் சேர்ந்து கொள்ள மொத்தம் ஆறு பேர் செல்ல முடிவானது. உடனே ஒரு 6 + 1 இருக்கைகள் கொண்ட Toyato Innova  வாடகைக்கு ஏற்பாடு செய்து விட்டோம்.

ஜனவரி மாதம் 10-ஆம் தேதி [வெள்ளிக் கிழமை] இரவு 07.30 மணிக்கு தில்லியிலிருந்து புறப்படுவதாக முடிவு செய்திருந்தோம்.  கடைசி நேரத்தில் ஆறு பேர் பயணிக்க இருந்தது நான்கு பேராக குறைந்து விட்டது – அலுவலகத்தில் ஆணி அதிகம் என்பதால்! சுபயோக சுபதினம் என்று சொல்லக்கூடிய வேளையில் எனது இல்லத்திலிருந்து புறப்பட்டோம். தில்லியில் வருவாய் வரி அலுவலகம் இருக்கும் பகுதி வழியாகச் செல்லும்போது சாலையில் நிறைய வாகனங்கள்.  தில்லியின் எல்லையைக் கடப்பதற்கே எட்டரை மணி ஆகிவிட்டது.

[G]காசியாபாத் பகுதியைக் கடக்கும்போது அந்த பகுதிகளில் வரிசையாக சாலை ஓரங்களில் நிறைய கடைகள் – தரைக் கடைகள். ஜனவரி மாதம் – பொதுவாக குளிர் காலங்களில் வட இந்தியாவில் வேர்க்கடலை வியாபாரம் நிறையவே நடக்கும். ஓடுடன் இருக்கும் கடலையை வாங்கி அதன் ஓடுகளை உறித்து தெருவெங்கும் இறைத்தபடியே போவதில் இங்குள்ளவர்களுக்கு அலாதி ஆனந்தம்.  சாலை ஓரங்களில் தரையில் மண் அடுப்புகள் வைத்து வேர்க்கடலை வறுத்துக் கொண்டிருந்தார்கள்.

மதியம் சாப்பிட்டது, இந்த வேர்க்கடலைக் கடைகளைப் பார்த்ததும் கொஞ்சம் பசிக்கவும் ஆரம்பித்தது!  வேர்க்கடலை மட்டுமே சாப்பிட்டு பசியைப் போக்க முடியாது என்பதால் வண்டி தொடர்ந்து சென்றது. தில்லியிலிருந்து சுமார் 130 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் [G]கஜ்ரோலா எனும் இடத்தில் சில நல்ல உணவகங்கள் இருப்பதாக அலுவலக நண்பர் சொல்லி இருந்ததால் [G]கஜ்ரோலா வரும் வரை வயிற்றையும் மனதையும் கட்டுப்படுத்தியபடி பயணித்தோம். [G]கஜ்ரோலா பகுதியில் உள்ள ”மோ[G]கா உணவகத்தில்” உணவு நன்றாக இருக்கும் என எங்களது வாகன ஓட்டுனர் பப்புவும் சொல்லவே அங்கே 10.45 மணி அளவில் சென்று அடைந்தோம்.

அங்கே நாங்கள் பஞ்சாபி தட்[d]காவுடன் அருமையான உணவு உண்டோம்.  ஐந்து பேர் [நாங்கள் நான்கு பேர் மற்றும் ஓட்டுனர் பப்பு] சாப்பிட 700 ரூபாய் மட்டுமே ஆனது. உணவகத்தில் உட்கார்ந்த உடனே நாம் கேட்காமல் அவர்களே Bislery சுத்திகரித்த தண்ணீர் வைக்க, பரவாயில்லையே என நினைத்தால் அதற்கும் சேர்த்து நம்மிடம் தான் வசூலிக்கிறார்கள் – எப்படியும் நீங்கள் தண்ணீர் வாங்கத்தானே போகிறீர்கள் என நினைத்திருப்பார்கள் போல!

உண்ட களைப்பில் கொஞ்சம் அசறலாம் என நினைத்தால் அந்த குளிரில் அங்கிருப்பதை விட பயணிப்பதே மேல் என ஓட்டுனர் பப்புவும் அபிப்ராயப்பட, எங்கள் பயணம் தொடர்ந்தது. இரவு நேரப் பயணம் எப்போதுமே எனக்குப் பிடித்தது. முன் இருக்கையில் அமர்ந்ததால் தூங்கவும் முடியாது – நாம் தூங்கி ஓட்டுனர் பப்புவும் தூங்கிவிட்டால்! அதனால் அவருடன் பேசியபடியே இரவின் நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டே நாங்கள் பயணித்தோம்.

சுகமான பயணமாக அமைந்தது அந்த இரவு நேரப் பயணம். என்னுடன் வந்த மற்ற மூன்று நபர்களும் பின் இருக்கைகளில் சுகமாக உறங்க, நான் பப்புவிடம் பேச்சுக் கொடுத்தபடி வந்தேன். பப்பு ஓரிரு வார்த்தைகள் மேலே பேசுவதில்லை.  சரி பயணம் முழுவதும் இப்படியே இருந்தால், அவருக்கும் போரடிக்குமே என நினைத்துக் கொண்டிருந்தேன்.  ஆனால் அவரையும் பேச வைத்துவிட்டனர் எங்கள் நண்பர்கள்.

என்னென்ன இடங்கள் பார்த்தோம், தங்கும் வசதிகள் எப்படி, பக்கத்தில் இருக்கும் பார்க்கவேண்டிய இடங்கள் என்னென்ன என்பதை வரும் பதிவுகளில் பார்க்கலாம்….

தொடர்ந்து அடுத்த பகுதியில் சந்திக்கலாம்!

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial 4.0 International License

ஏரிகள் நகரம் - நைனிதால் by வெங்கட் நாகராஜ் is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License, except where otherwise noted.

Share This Book

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *